சச்சினின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார்: ஜெஃப்ரி பாய்காட் கணிப்பு

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பார் என...
சச்சினின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார்: ஜெஃப்ரி பாய்காட் கணிப்பு

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பார் என கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரைக் கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.

இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 426 ரன்கள் எடுத்துள்ளார் ஜோ ரூட். ஒரு சதமும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார். 

30 வயது ரூட் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதங்கள், 49 அரை சதங்களுடன் 8249 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார் என கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். ஒரு கட்டுரையில் அவர் கூறியதாவது:

டேவிட் கோவர், கெவின் பீட்டர்சன் ஆகியோரை விடவும் அதிக ரன்கள் எடுத்ததை மறந்து விடவும். ஜோ ரூட்டால் 200 டெஸ்டுகளில் விளையாட முடியும். சச்சினை விடவும் அதிக ரன்களைக் குவிக்க முடியும். 

ரூட்டுக்கு 30 வயது தான் ஆகிறது. இப்போதே 99 டெஸ்டுகளில் விளையாடி 8249 ரன்கள் எடுத்துள்ளார். பெரிய காயம் எதுவும் ஏற்படாவிட்டால் சச்சினின் 15,921 டெஸ்ட் ரன்கள் சாதனையை அவரால் ஏன் முறியடிக்க முடியாது?

ரூட்டின் சமகால வீரர்களான கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் என அனைவரும் அற்புதமான வீரர்கள். அவர்களாலும் அதிக ரன்களை எடுக்க முடியும். ரூட்டை இவர்களுடன் தான் ஒப்பிட வேண்டும். அவருக்கு முன்னால் ஆடியவர்களுடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு வீரரும் சூழலுக்கு ஏற்றாற்போல உருவாகிறார்கள் என்றார்.

200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள், 68 அரை சதங்களுடன் 15921 ரன்கள் எடுத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com