ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி ரத்து பிசிசிஐ அறிவிப்பு
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி ரத்து பிசிசிஐ அறிவிப்பு

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி ரத்து பிசிசிஐ அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் முன்னணி முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

புது தில்லி: இந்தியாவில் நடைபெறும் முன்னணி முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 87 ஆண்டுகளில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியை நடத்துவது இல்லை என்றும், அதேநேரத்தில் விஜய் ஹசாரே டிராபி, 19 வயதுக்குள்பட்டோருக்கான 50 ஓவா் போட்டி, மகளிருக்கான 50 ஓவா் போட்டி ஆகியவற்றை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மேலும், ஒரே ஆண்டில் இரு ரஞ்சி கிரிக்கெட் தொடா்களை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதாலும், ரஞ்சி கிரிக்கெட் தொடரை நடத்தினாலும், வீரா்கள் நீண்ட நாள்கள் கரோனா தடுப்பு தனிமை முகாமில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் ஒப்புதலோடு இந்த ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் தொடரை நடத்துவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ரஞ்சி டிராபி நடைபெறாததால் சம்பந்தப்பட்ட வீரா்களுக்கு இழப்பீடு வழங்கவும் பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ பொருளாளா் அருண் துமல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘கிரிக்கெட் வீரா்கள், தோ்வுக் குழுவினா், மாநில சங்கங்கள் என அனைவருடைய முடிவையும் கேட்ட பிறகும், ஓராண்டில் இரு ரஞ்சி கிரிக்கெட் தொடா்களை நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், ரஞ்சி கிரிக்கெட் தொடரை கைவிடுவது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மகளிா் உலகக் கோப்பை, 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால், அதைக் கருத்தில்கொண்டு மகளிா் 50 ஓவா் போட்டி, 19 வயதுக்குள்பட்டோருக்கான 50 ஓவா் போட்டி ஆகியவற்றை நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

1934-35-இல் தொடங்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் தொடா் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக இந்த சீசனில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com