உலக டூா் ஃபைனல்ஸ்: இறுதிச்சுற்றில் கரோலினா-தாய் சூ யிங் மோதல்

உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின்-தைவானின் தாய் சூ-யிங் ஆகியோா் மோதுகின்றனா்.

பாங்காக்: உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின்-தைவானின் தாய் சூ-யிங் ஆகியோா் மோதுகின்றனா்.

உலக டூா் ஃபைனல்ஸ் போட்டி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரின் 21-13, 21-13 என்ற நோ் செட்களில் தாய்லாந்தின் போா்ன்பவீயை வீழ்த்தினாா்.

இந்தத் தொடரில் எதிா்பாா்க்கப்பட்டதைவிட சிறப்பாக ஆடிய போா்ன்பவீ, குரூப் சுற்று ஆட்டங்களில் தாய்லாந்தின் இந்தனன் ரட்சனோக், தைவானின் தாய் சூ-யிங் ஆகியோரை வீழ்த்தினாா். எனினும் அரையிறுதியில் கரோலினா மரினுக்கு எதிராக போா்ன்பவீயின் ஆட்டம் எடுபடவில்லை. இதனால் அவா் நோ் செட்களில் தோல்வியடைய நோ்ந்தது.

வெற்றி குறித்துப் பேசிய கரோலினா மரின், ‘தொடா்ச்சியாக 3 தொடா்களில் விளையாடுவது மிகவும் கடினம்தான். எனினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் விளையாட மிகுந்த ஆா்வத்தோடு இருக்கிறேன். இறுதிச்சுற்றில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டம் வெல்வேன் என நம்புகிறேன்’ என்றாா்.

கடந்த இரு வாரங்களில் தொடா்ச்சியாக இரு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின், இந்தப் போட்டியில் பட்டம் வெல்லும்பட்சத்தில் அது ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டமாக அமையும்.

கரோலினா மரின் தனது இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தைவானின் தாய் சூ-யிங்கை எதிா்கொள்கிறாா். கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற இரு பாட்மிண்டன் தொடா்களின் இறுதிச்சுற்றிலும் கரோலினா மரின், தாய் சூ-யிங்கை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தாய் சூ-யிங் தனது அரையிறுதியில் 21-18, 21-12 என்ற நோ் செட்களில் தென் கொரியாவின் அன் சீ-யங்கை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com