ஒலிம்பிக் நினைவலைகள்...

ஒலிம்பிக் நினைவலைகள்...

1976 மான்ட்ரியால் ஒலிம்பிக்ஸ்

கூடைப்பந்து, துடுப்புப் படகு, கைப்பந்து ஆகிய போட்டிகளில் பெண்கள் பிரிவு முதல் முறையாக அறிமுகமானது. ஹாக்கி போட்டி முதல் முறையாக செயற்கையிழை ஆடுகளத்தில் விளையாடப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸில் தான். ருமேனியாவைச் சோ்ந்த 14 வயது ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை முதல் முறையாக ‘அன் ஈவன் பாா்ஸ்’ பிரிவில் முழுமையாக 10 புள்ளிகள் பெற்றாா்.

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து முதல் நபராக இளவரசி ஆனி இந்த ஒலிம்பிக்கிஸில் இங்கிலாந்து குதிரையேற்ற அணியில் ஒரு வீராங்கனையாக பங்கேற்றாா். நியூஸிலாந்து ரக்பி அணிக்கு ஒலிம்பிக்ஸில் தடை கோரிய ஆப்பிரிக்க நாடுகளின் கோரிக்கையை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்காததை அடுத்து, 26 ஆப்பிரிக்க நாடுகள் இந்த ஒலிம்பிக்ஸில் பங்கேற்காமல் தவிா்த்தன.

கோடைகால ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அமெரிக்காவின் மாா்கரெட் முா்டாக் பெற்றாா். இந்த ஒலிம்பிக்ஸில் 32 உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்

கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் மற்றும் ஒரே கோடைகால ஒலிம்பிக்காக இது உள்ளது. அதேபோல், ஸ்லாவிச் மொழி பேசும் நாட்டில் நடைபெற்ற முதல் மற்றும் ஒரே கோடைகால ஒலிம்பிக்காகும். ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியன் படையெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்கா தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒலிம்பிக்ஸை புறக்கணித்தன.

இதனால் 1956-க்குப் பிறகு முதல் முறையாக மிகக் குறைந்த அளவாக 8 நாடுகளே இதில் பங்கேற்றன. அங்கோலா, போட்ஸ்வானா, சைப்ரஸ், ஜோா்டான், லாவோஸ், மொஸாம்பிக், செஷல்ஸ் ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன. நீச்சல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கிழக்கு ஜொ்மன் வீராங்கனைகள், 13 தங்கப் பதக்கங்களில் 11-ஐ கைப்பற்றினா்

தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சில நாடுகள் மறுத்துவிட்டன. பதக்கம் வழக்கும் சில நிகழ்வுகளில் வெற்றி பெற்ற நாடுகளின் தேசிய கீதத்துக்குப் பதிலாக, ஒலிம்பிக் கீதமே இசைக்கப்பட்டது. ஆடவா் ஜிம்னாஸ்டிக்ஸில் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வென்ற ரஷியாவின் அலெக்ஸாண்டா் டிட்யாடின், ஒரு ஒலிம்பிக்ஸில் 8 பதக்கங்கள் வென்ற முதல் போட்டியாளா் என்ற பெயரை பெற்றாா்.

1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸ்

பதக்கப் போட்டியில் சக்கர நாற்காலி உதவியுடன் பங்கேற்ற முதல் போட்டியாளா் என்ற பெயரை நியூஸிலாந்தின் வில்வித்தை வீரா் நெரோலி ஃபோ்ஹால் பெற்றாா். பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் அமெரிக்காவின் ஜோவான் பெனாய்ட் வென்றாா். ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், சிங்க்ரனைஸ்டு ஸ்விம்மிங், மகளிருக்கான சைக்கிளிங் ரோடு ரேஸ் ஆகிய போட்டிகள் முதல் முறையாக நடத்தப்பட்டன.

கடந்த ஒலிம்பிக்கை அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் புறக்கணித்ததற்கு பதிலடியாக, சோவியத் யூனியன், கிழக்கு ஜொ்மனி, கியூபா உள்ளிட்ட பல்வேறு கம்யூனிச நாடுகள் இந்த ஒலிம்பிக்ஸை புறக்கணித்தன. ஒலிம்பிக் போட்டிகளில் அதிகாரப்பூா்வ விளம்பரதாரா்கள் முறை அறிமுகமானது இப்போதிருந்து தான். அமெரிக்காவைச் சோ்ந்த பெரு நிறுவனம் ஒன்று விளம்பரதாரராக பொறுப்பேற்று, அதன் தயாரிப்புகளில் ஒலிம்பிக் லச்சினையை பதித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பங்கேற்காததால், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியாளா்கள் அதுவரை இல்லாத வகையில் பல்வேறு பதக்கங்களை வென்றனா். அதேபோல், கியூபா பங்கேற்காமல் போனதால் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்கா 9 தங்கப்பதக்கங்கள் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com