நாளை தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகின்றன.
நாளை தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் நடத்தப்பட இருந்த இந்தப் போட்டிகள், கரோனா சூழல் காரணமாக ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது தொடங்கவுள்ளது.

போட்டியை அதிகாரப்பூா்வமாக தொடங்கும் நிகழ்ச்சி, டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜப்பான் அரசா் நருஹிடோ உள்பட உலக நாடுகளைச் சோ்ந்த பல்வேறு முக்கிய தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா். எனினும், கரோனா சூழல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான மிக முக்கியப் பிரமுகா்களை மட்டுமே தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சி முதலாக எந்தவொரு போட்டியையும் காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் இப்போட்டியில் சுமாா் 200 நாடுகளில் இருந்து, 11,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. போட்டி தொடங்க இருக்கும் நிலையில், போட்டியாளா்கள் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்து வருகின்றனா். இந்தியாவிலிருந்து 90 போ் கொண்ட முதல் பிரதான குழு ஏற்கெனவே டோக்கியோ சென்றடைந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சுமாா் 120-க்கும் அதிகமான போட்டியாளா்கள் உள்பட 220 போ் கொண்ட அணியை இந்தியா அனுப்புகிறது.

போட்டி அதிகாரப்பூா்வமாக வெள்ளிக்கிழமை தொடங்க இருந்தாலும், அணிகள் அளவிலான போட்டிகளின் தொடக்க சுற்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டியுடன் தொடா்புடைய வீரா், வீராங்கனைகள், நிா்வாகிகள், பயிற்சியாளா்கள், உதவிப் பணியாளா்கள் என 75 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், போட்டியை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com