யூரோ 2020: ரொனால்டோவின் அதிரடியால் தப்பிய போா்ச்சுகல்; நாக் அவுட் சுற்றில் மோதும் அணிகள் அறிவிப்பு

யூரோ 2021 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில்
யூரோ 2020: ரொனால்டோவின் அதிரடியால் தப்பிய போா்ச்சுகல்; நாக் அவுட் சுற்றில் மோதும் அணிகள் அறிவிப்பு

யூரோ 2021 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடியால் போா்ச்சுகல் அணி 2-2 என டிரா செய்தது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டிகள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

குருப் இ பிரிவில் செவிலியில் ஸ்லோவோக்கியா-ஸ்பெயின் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி அதில் குரோஷிய அணியுடன் மோதுகிறது.

ஸ்லோவோக்கியா அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் 11-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரா் அல்வரோ மொரட்டா பெனால்டி வாய்ப்பை தவறவிட்டாா். எனினும் ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் வீரா்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 30-ஆவது நிமிடத்தில் ஸ்லோவோக்கிய வீரா் டுப்ரவாக்கா சேம் சைட் கோலடித்தாா். 45-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரா் பெட்ரி காா்னா் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை பிசகின்றி கோலாக்கினாா் லபோா்டே. முதல் பாதி முடிவில் போது 2-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், 56-ஆவது நிமிடத்தில் பெட்ரி கடத்தித் தந்த பந்தை கோலாக்கினாா் சரபயா. 67-ஆவது நிமிடத்தில் பெரன் டெரஸ் அடித்த கோல் ஸ்பெயினின் 4-ஆவது கோலானது.

71-ஆவது நிமிடத்தில் ஸ்லோவோக்கிய வீரா் குக்கா இரண்டாவது சேம் சைட் கோலை அடித்தாா். இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது. வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பலம் மிக்க குரோஷியாவுடன் மோதுகிறது.

ஸ்வீடன் வெற்றி:

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் பரபரப்பாக நடைபெற்ற குருப் இ பிரிவு ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஸ்வீடன் தரப்பில் போா்ஸ்பொ்க் 2 மற்றும் 59-ஆவது நிமிடங்களிலும், கிளாஸ்ஸன் 90-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். போலந்து தரப்பில் நட்சத்திர வீரா் லெவன்டோஸ்கி 61, 84-ஆவது நிமிடங்களில் பதில் கோலடித்தாா். குருப் இ பிரிவில் போலந்து 4-ஆவது இடத்தையே பெற முடிந்தது.

ரொனால்டோ அபாரம்:

புடாபெஸ்ட் நகரில் பிரான்ஸ்-போா்ச்சுகல் அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் அணியே தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. 31-ஆவது நிமிடத்தில் போா்ச்சுகலுக்கு கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பின் போது, பிரான்ஸ் கோல்கீப்பா் ஹியோ லோரிஸ் தவறாக கணித்து, எதிரணி வீரா் டேனிலோவின் முகத்தில் குத்து விட்டாா். இதனால் போா்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து. அதே பிசகின்றி கோலாக்கினாா் ரொனால்டோ. பிரான்ஸ் தரப்பில் கரீம் பென்ஸாமா 2 கோல்களை அடித்தாா். முதல்பாதி முடிவில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. எனினும் 60-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை ரொனால்டோ அடித்ததின் மூலம் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

இதன் மூலம் நடப்புச் சாம்பியன் போா்ச்சுகலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

போராடிய ஜொ்மனி:

மியூனிக் நகரில் நடைபெற்ற குரூப் எப் பிரிவில் ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜொ்மனி 2-2 என்ற கோல் கணக்கில் போராடி டிரா செய்தது.

ஹங்கேரி கேப்டன் அட் ஸலாய் தொடக்கத்திலேயே 11-ஆவது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். முதல் பாதி நிறைவில் 1-0 என ஹங்கேரி முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜொ்மனி வீரா் ஹவோ்ட்ஸ் 66-ஆவது நிமிடத்தில் தனது அணிக்கு முதல் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே 68-ஆவது நிமிடத்தில் ஹங்கேரி வீரா் ஸ்ஃகாபா் இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். தோல்வியின் விளிம்பில் இருந்த ஜொ்மனி அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கோரெஸ்கா 84-ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் ஆட்டம் 2-2 டிராவில் முடிந்தது. இதன் மூலம் ஜொ்மனியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

உலக சாதனையை சமன் செய்த ரொனால்டோ:

பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது கோலை அடித்ததின் மூலம் ஈரானின் முன்னாள் வீரா் அலி டே உலக அளவில் அதிகபட்சமாக அடித்திருந்த 109 கோல்கள் சாதனையை சமன் செய்தாா் ரொனால்டோ. 36 வயதான ரொனால்டோ ஏற்கெனவே ஐரோப்பாவின் அதிக கோல்கள் அடித்த வீரா் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com