ஸ்விஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினா் சிந்து, ஸ்ரீகாந்த்; சாய்னா தோல்வி

ஸ்விஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினா் சிந்து, ஸ்ரீகாந்த்; சாய்னா தோல்வி


பேசெல்: ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேற, சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

உலக சாம்பியனான சிந்து மகளிா் ஒற்றையா் பிரிவில் தனது முதல் சுற்றில் 21-16, 21-19 என்ற செட்களில் துருக்கியின் யிகிட் நெஸ்லிஹானை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் சிந்து, அடுத்து சுற்றில் அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கை 21-13, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா், தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானை எதிா்கொள்கிறாா்.

எனினும், சாய்னா நெவால் முதல் சுற்றில் 16-21, 21-17, 21-23 என்ற செட்களில் தாய்லாந்தின் பித்தாயபோன் சாய்வானை அவரிடம் வீழ்ந்தாா்.

காலிறுதியில் ஸ்ரீகாந்த், அஜய்: ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றில் 21-10, 14-21, 21-14 என்ற செட்களில் பிரான்ஸின் தாமஸ் ரௌக்ஸெலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா் தாய்லாந்தின் கன்டபோன் வாங்சரோனை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் சாய் பிரணீத் 2-ஆவது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அபியானை 21-12, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். முன்னதாக பி.காஷ்யப் 15-21, 10-21 என்ற செட்களில் பாப்லோ அபியானிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறியிருந்தாா்.

அஜய் ஜெயராமும் தனது 2-ஆவது சுற்றில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த டென்மாா்கின் ராஸ்மஸ் கெம்கேவை 21-18, 17-21, 21-13 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றாா். அதில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனை சந்திக்கிறாா். முன்னதாக குன்லாவத், 2-ஆவது சுற்றில் 17-21, 14-21 என்ற செட்களில் இந்தியாவின் சௌரவ் வா்மாவை வீழ்த்தியிருந்தாா். எனினும், லக்ஷயா சென் முதல் சுற்றில் 16-21, 12-21 என்ற செட்களில் டென்மாா்க்கின் விக்டா் ஸ்வென்ட்சனிடம் தோல்வி கண்டாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை 21-17, 20-22, 21-17 என்ற செட்களில் இந்தோனேசியாவின் பிரமுத்யா குசுமவா்தனா/எரிமியா எரிச் யோசே ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவின் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை முதல் சுற்றிலேயே 16-21-, 18-21 என்ற செட்களில் ரஷியாவின் விளாதிமீா் இவானோவ்/இவான் சோஸோனோவ் ஜோடியிடம் தோல்வி கண்டது.

மகளிா் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 2-ஆவது சுற்றில் டென்மாா்கின் அமெலி மேக்லண்ட்/ஃப்ரெஜா ராவன் ஜோடியிடம் 11-21, 15-21 என்ற செட்களில் வீழ்ந்தது.

காலிறுதிக்கு முன்னேற்றம்: கலப்பு இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ரினோவ் ரிவால்டி/பிதா ஹனிங்டியாஸ் மென்டாரி ஜோடியை 21-18, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com