சதமடித்து முதல் டெஸ்டை டிரா செய்த மே.இ. தீவுகள் அணியின் போனர்! (விடியோ)

கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஹோல்டர் (கோப்புப் படம்)
ஹோல்டர் (கோப்புப் படம்)

மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹோல்டர் மற்றும் கெமர் ரோச் ஆகிய இருவரும் அபாரமாகப் பந்துவீசி இலங்கை அணியை 169 ரன்களுக்குள் சுருட்டினார்கள். லஹிரு திரிமனே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் ரோச் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 103 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 149.5 ஓவர்களில் 476 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி 374 ரன்கள் முன்னிலை பெற்றது. அறிமுக வீரர் நிசன்கா அபாரமாக விளையாடி சதம் அடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்வெல்லா 96 ரன்களும் தனஞ்ஜெயா டி சில்வா 50 ரன்களும் எடுத்தார்கள். 438/5 என்கிற நிலையில் இருந்த இலங்கை அணி கடைசி 5 விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு இழந்தது. மே.இ. தரப்பில் கார்ன்வால், ரோச் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த மே.இ. தீவுகள் அணி 4-ம் நாள் முடிவில் 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

5-ம் நாளன்று எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இலங்கை அணியின் முயற்சியை நடுவரிசை பேட்ஸ்மேன்களான போனரும் கைல் மேயர்ஸும் அபாரமாக விளையாடி தடுத்தார்கள். போனர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 113 ரன்கள் எடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். கைல் மேயர்ஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி தோல்வியைத் தவிர்த்தார்கள். 

கடைசியில் மே.இ. தீவுகள் அணி, 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்ததால் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இலங்கையின் விஸ்வா பெர்னான்டோ, லசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

2-வது டெஸ்ட், மார்ச் 29 அன்று தொடங்குகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com