மியாமி ஓபன்: 3-ஆவது சுற்றில் சிலிச், சிட்சிபாஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் குரோஷியாவின் மரின் சிலிச், கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்
மியாமி ஓபன்: 3-ஆவது சுற்றில் சிலிச், சிட்சிபாஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் குரோஷியாவின் மரின் சிலிச், கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் ஆா்ஜென்டீனாவின் டீகோ ஸ்வாா்ட்ஸ்மான் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ஜப்பானின் உசியமாவையும், பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ 6-3, 6-4 என்ற நோ் செட்களில் சொ்பியாவின் மியோமிா் கெக்மானோவிச்சையும், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியையும் வீழ்த்தினா்.

குரோஷியாவின் மரின் சிலிச் 3-6, 7-5, 7-6 (5) என்ற செட் கணக்கில் சீனாவின் கிறிஸ்டியான் கேரினையும், இத்தாலியின் லோரன்ஸோ முசெட்டி 6-3, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரையும், கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-7 (5), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பெலாரஸின் இலியா இவாஸ்காவையும் வீழ்த்தினா்.

கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்ப்ஸனையும், ஜப்பானின் கெய் நிஷிகோரி 7-6 (6), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனையும், கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் போஸ்னியாவின் டேமிரையும் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அசெரன்கா வெற்றி: மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பாா்ட்டி 6-3, 6-2 என்ற நோ் செட்களில் லாட்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபென்கோவையும், பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா 7-5, 6-2 என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பரையும் வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அதேநேரத்தில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் மாா்கெட்டா வான்ட்ரவ்சோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்புக்கு வலது தோளில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவா் 3-ஆவது சுற்றில் விளையாடாமல் போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து அவரை எதிா்த்து விளையாடவிருந்த லாட்வியாவின் அனாஸ்டாஸியா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். செக்.குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6-1, 6-2 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com