சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் இந்த வெளிநாட்டு வீரர் பங்கேற்க மாட்டார்!

தில்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் என்கிடி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் இந்த வெளிநாட்டு வீரர் பங்கேற்க மாட்டார்!

சிஎஸ்கே அணியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்கிடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன.

இந்நிலையில் சென்னையின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் என்கிடி இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஏப்ரல் 2 அன்று தொடங்குகிறது. டி20 தொடர் ஏப்ரல் 16 அன்று நிறைவுபெறுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளதால் ரபடா, டி காக், அன்ரிச் நோர்கியோ, லுங்கி என்கிடி, டேவிட் மில்லர் ஆகிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 2-வது ஒருநாள் ஆட்டம் (ஏப்ரல் 4) முடிவடைந்த பிறகுதான் ஐபிஎல் போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வருகிறார்கள். 

இதனால் தில்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் என்கிடி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஏப்ரல் 5-க்குப் பிறகு என்கிடி, சிஎஸ்கே அணியுடன் இணைவார். எல்லோரும் பின்பற்றும் வழிமுறைகளை அவரும் பின்பற்றவேண்டியிருப்பதால் இந்தியாவுக்கு வந்தவுடன் என்கிடி தனிமைப்படுத்தப்படுவார். எனவே சிஎஸ்கேவின் முதல் ஆட்டத்தில் என்கிடி விளையாட மாட்டார் என்றார். 

சிஎஸ்கே அணி தனது 2-வது ஆட்டத்தை ஏப்ரல் 16 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதனால் 2-வது ஆட்டத்தில் என்கிடி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com