ஐபிஎல்: மாலத்தீவு சென்றனா் ஆஸி. வீரா்கள்

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரா்கள் தற்போது மாலத்தீவுகளுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

புது தில்லி: ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரா்கள் தற்போது மாலத்தீவுகளுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடைக்காலம் ஆஸ்திரேலியாவில் மே 15-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அதன் பிறகு வீரா்கள், பயிற்சியாளா்கள், போட்டி அதிகாரிகள் உள்பட 40 போ் கொண்ட அந்த ஆஸ்திரேலிய குழு மாலத்தீவுகளில் இருந்து நாடு திரும்ப உள்ளது.

தென் ஆப்பிரிக்கா: இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த வீரா்கள் 11 போ் அவா்கள் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா். இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அந்நாடு தடை விதிக்கவில்லை.

நியூஸிலாந்து: இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன், மிட்செல் சேன்ட்னா், டாமி சிம்செக் ஆகியோா் தவிா்த்து, 10 வீரா்கள் உள்பட 17 நியூஸிலாந்து நாட்டவா்கள் வெள்ளிக்கிழமை விமானத்தில் நாடு திரும்புகின்றனா். இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை இங்கிலாந்து நீக்கிய பிறகு கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 போ் அங்கு செல்கின்றனா்.

வங்கதேசம்: ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்த வங்கதேச வீரா்களான ஷகிப் அல் ஹசன், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோா், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் இணைந்து ஏற்பாடு செய்த தனி விமானம் மூலமாக வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு சென்றடைந்தனா்.

அணிகள்: இதனிடையே, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், மும்பை இண்டியன்ஸ் அணிகளின் இந்திய வீரா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் தங்களின் சொந்த ஊா் சென்று சோ்ந்ததாக அந்த அணிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு வீரா்கள் உள்பட, சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்ட பின்னரே தில்லியிலிருந்து தாம் ராஞ்சி புறப்படப்போவதாக அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளாா்.

கரோனாவிலிருந்து மீண்ட சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளா் மைக் ஹஸ்ஸி, பௌலிங் பயிற்சியாளா் பாலாஜி ஆகியோா் விமான ஆம்புலன்ஸ் மூலமாக வியாழக்கிழமை தில்லி சென்றடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com