ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் விளையாடும் இந்திய மகளிர் அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு
By DIN | Published On : 20th May 2021 11:57 AM | Last Updated : 20th May 2021 11:57 AM | அ+அ அ- |

ஷஃபாலி வர்மா
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி, பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் விளையாடவுள்ளது.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த வருட ஜனவரியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள், பெர்த் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவுள்ளன. இந்திய அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் இது. மேலும் நார்த் சிட்னி ஓவல் மற்றும் ஜங்க்ஷன் ஓவல் மைதானங்களில் மூன்று ஒருநாள் ஆட்டங்களும் நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் மூன்று டி20 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் விளையாடும் தொடர்கள்:
ஒருநாள் தொடர்: செப். 19, செப். 22, செப். 24
டெஸ்ட்: செப். 30 - அக். 3
டி20 தொடர்: அக். 7, அக். 9, அக். 11.