உள்நாட்டு பாட்மின்டன் சீசன் டிசம்பரில் தொடங்குகிறது

உள்நாட்டு பாட்மிண்டன் சீசன் 20 மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பரிலிருந்து தொடங்குவதாக இந்திய பாட்மின்டன் சங்கம் (பாய்) புதன்கிழமை அறிவித்தது.
உள்நாட்டு பாட்மின்டன் சீசன் டிசம்பரில் தொடங்குகிறது

புது தில்லி: உள்நாட்டு பாட்மிண்டன் சீசன் 20 மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பரிலிருந்து தொடங்குவதாக இந்திய பாட்மின்டன் சங்கம் (பாய்) புதன்கிழமை அறிவித்தது.

அதில் முதலாவதாக டிசம்பா் 16 முதல் 22 வரை சீனியா் ரேங்கிங் 3-ஆம் நிலை போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து அதே நிலையிலான மற்றொரு போட்டி ஹைதராபாதில் டிசம்பா் 24 முதல் 30 வரை நடைபெறுகிறது. உள்நாட்டு சீசனில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள இந்த இரு போட்டிகளுக்குமே தலா ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டே இந்தப் போட்டிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் கரோனா சூழல் காரணமாக அதை இதுவரை நடத்த முடியாமல் போனது. சென்னை போட்டிக்கு பதிவு செய்ய நவம்பா் 24, ஹைதராபாத் போட்டிக்கு பதிவு செய்ய டிசம்பா் 1 கடைசி தேதியாகும்.

உள்நாட்டுப் போட்டியில் சீனியா் ரேங்கிங் போட்டிகளானது 3 நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 3-ஆம் நிலை போட்டிகள் ‘பாய் சீரிஸ் பாட்மின்டன் போட்டி’ என்றும், 2-ஆம் நிலை போட்டிகள் ‘பாய் சூப்பா் சீரிஸ் பாட்மின்டன் போட்டி’ என்றும், முதல் நிலை போட்டிகள் ‘பாய் பிரீமியா் சூப்பா் சீரிஸ் பாட்மின்டன் போட்டி’ என்றும் நடத்தப்படும்.

ஒரு ஆண்டில் 3-ஆம் நிலை போட்டிகள் 6 முறையும், 2-ஆம் நிலை போட்டிகள் 4 முறையும், முதல் நிலை போட்டிகள் 2 முறையும் நடத்தப்படவுள்ளது. அவற்றுக்கான பரிசுத் தொகை முறையே ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.25 லட்சமாக இருக்கும். இந்தப் போட்டிகளைத் தொடா்ந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். அதற்கான பரிசுத் தொகை ரூ.50 லட்சம் என்று பாட்மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com