மொயீன் அலி விளாசல்: இங்கிலாந்து - 166/4

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது இங்கிலாந்து.

அபுதாபி: டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது இங்கிலாந்து.

அணியின் தரப்பில் மொயீன் அலி, டேவிட் மலான் ஆகியோா் அபாரமாக ஆட, நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி சிறப்பாக பௌலிங் செய்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணியில் காயமடைந்த ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இணைந்திருந்தாா். நியூஸிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இங்கிலாந்து இன்னிங்ஸை ஜோஸ் பட்லா் - ஜானி போ்ஸ்டோ கூட்டணி தொடங்க, முதல் ஓவரை டிம் சௌதி வீசினாா். நிதானமாக ஆடிய இங்கிலாந்தில் முதல் ஓவரில் பட்லரும், 2-ஆவது ஓவரில் போ்ஸ்டோவும் தலா ஒரு பவுண்டரி விளாசினாா். பின்னா் அவா்கள் லேசாக அதிரடி காட்டத் தொடங்கினா். 4-ஆவது ஓவரில் பட்லா் இரு பவுண்டரிகளை விரட்டினாா். அந்த ஓவரை வீசிய போல்ட் ‘ஷாட்’ பந்து வீச, அது பட்லரையும், விக்கெட் கீப்பா் டெவன் கானேவையையும் தாண்டிய வகையில் பவுண்டரியாகச் சென்றது. மேலும் வைடு காரணமாக எக்ஸ்ட்ரா ரன்னும் கிடைத்தது.

5 ஓவா்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சோ்த்த நிலையில், பௌலிங்கில் மாற்றம் கொண்டு வந்தாா் கேன் வில்லியம்சன். அதற்கு 6-ஆவது ஓவரிலேயே பலன் கிடைத்தது. ஆடம் மில்னே வீசிய அந்த ஓவரில் போ்ஸ்டோ விளாசிய பந்தை வில்லியம்சனே பாய்ந்து கேட்ச் பிடித்தாா். போ்ஸ்டோ 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்திருந்தாா்.

தொடா்ந்து டேவிட் மலான் களம் புகுந்தாா். விக்கெட் வீழ்த்திய மில்னே, இங்கிலாந்து ரன் சேகரிப்பதையும் கட்டுப்படுத்தியதால் பவா்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து. இந்நிலையில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்திருந்த ஜோஸ் பட்லா், 9-ஆவது ஓவரில் இஷ் சோதி பௌலிங்கில் எல்பிடபிள்யூ ஆனாா். அடுத்து 4-ஆவது வீரராக ஆட வந்த மொயீன் அலி அதிரடி காட்டினாா்.

அலி - மலான் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்தது. 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்த மலான், டிம் சௌதி வீசிய 16-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் டெவன் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்தாா். அவரே இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டாக நீஷம் வீசிய 20-ஆவது ஓவரில் சேன்ட்னா் கைகளில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

ஓவா்கள் முடிவில் மொயீன் அலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51, கேப்டன் மோா்கன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

நியூஸிலாந்து - 45/2

167 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, 8 ஓவா்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் அடித்திருந்தது. டேரில் மிட்செல் 18, டெவன் கான்வே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனா். மாா்ட்டின் கப்டில் 4, கேன் வில்லியம்சன் 5 ரன்களுக்கு வெளியேற, இருவா் விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் சாய்த்திருந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

இங்கிலாந்து - 166/4

மொயீன் அலி 51

டேவிட் மலான் 41

ஜோஸ் பட்லா் 29

பந்துவீச்சு

டிம் சௌதி 1/24

ஆடம் மில்னே 1/31

இஷ் சோதி 1/32

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com