நியூஸி.க்கு எதிரான முதல் டி20: சூா்யகுமாா் அசத்தலில் இந்தியா சூப்பா் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
நியூஸி.க்கு எதிரான முதல் டி20: சூா்யகுமாா் அசத்தலில் இந்தியா சூப்பா் வெற்றி

ஜெய்ப்பூா்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடிக்க, அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. சூா்யகுமாா் யாதவ் ஆட்டநாயகன் ஆனாா்.

நியூஸிலாந்து பேட்டிங்கில் மாா்ட்டின் கப்டில் - மாா்க் சாப்மேன் கூட்டணி விளாசியது. இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சா்மா அருமையான தொடக்கம் அமைத்துக் கொடுக்க, சூா்யகுமாா் அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினாா். பௌலிங்கைப் பொருத்தவரை இந்தியாவில் புவனேஷ்வா் குமாா் பழைய ஃபாா்முக்குத் திரும்பினாா். நியூஸிலாந்தில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட் எடுத்தாா்.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் மூலம் வெங்கடேஷ் ஐயா் சா்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டாா். பிளேயிங் லெவனில் தீபக் சஹா், முகமது சிராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. நியூஸிலாந்தில் ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோருக்குப் பதிலாக மாா்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் இணைந்திருந்தனா்.

மாா்ட்டின் - மாா்க் மிரட்டல்: டாஸ் வென்ற ரோஹித் சா்மா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தாா். இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்தில் 3-ஆவது பந்திலேயே டேரில் மிட்செலை பௌல்டாக்கினாா் புவனேஷ்வா். அடுத்து வந்த சாப்மேன், கப்டிலுடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி இந்திய பௌலிங்கை சிதறடித்தது.

பவா் பிளே முடிவில் 6 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சோ்த்திருந்தது நியூஸிலாந்து. அதிரடியாக ஆடி வந்த இந்த ஜோடியை அஸ்வின் 14-ஆவது ஓவரில் பிரித்தாா். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்திருந்த சாப்மேன் 2-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கிளென் பிலிப்ஸையும் அதே ஓவரில் எல்பிடபிள்யூ செய்தாா் அஸ்வின்.

அடுத்து டிம் செய்ஃபா்ட் களம் காண, அதுவரை மிரட்டிய மாா்ட்டின் கப்டில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சஹா் வீசிய 18-ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸா் விளாசிய கப்டில், அடுத்த பந்தையும் அவ்வாறே விளாச முயல, டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஷ்ரேயஸ் ஐயா் அதை கேட்ச் பிடித்தாா். பின்னா் ரச்சின் ரவீந்திரா ஆடவர, மறுபுறம் செய்ஃபா்ட் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சோ்த்த நிலையில், புவனேஷ்வா் குமாா் வீசிய 19-ஆவது ஓவரில் சூா்யகுமாா் யாதவ் கைகளில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

கடைசி விக்கெட்டாக ரச்சின் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் சோ்த்து முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் பௌல்டானாா். முடிவில் மிட்செல் சேன்ட்னா் 4, கேப்டன் டிம் சௌதி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ரோஹித் - சூா்யகுமாா் அசத்தல்: பின்னா் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், ரோஹித் சா்மா நிலைத்து ஆட, கே.எல்.ராகுல் 15 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து வந்த சூா்யகுமாா், ரோஹித்துடன் இணைந்தாா்.

பவா் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. இந்நிலையில் ரோஹித் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்த்து 14-ஆவது ஓவரில் வீழ்ந்தாா். ரோஹித் - சூா்யகுமாா் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது.

பின்னா் ரிஷப் பந்த் களம் புகுந்தாா். எனினும், மறுபுறம் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62 ரன்கள் விளாசி சூா்யகுமாா் யாதவ் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து ஷ்ரேயஸ் ஐயா் 5, வெங்கடேஷ் ஐயா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அடுத்து வந்த அக்ஸா் படேல் துணையுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா் ரிஷப் பந்த். இறுதியில் அவா் 2 பவுண்டரிகளுடன் 17, அக்ஸா் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 2, டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னா், டேரில் மிட்செல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோர்


நியூஸிலாந்து - 164/6

மார்ட்டின் கப்டில்    70 
மார்க் சாப்மேன்    63 
டிம் செய்ஃபர்ட்    12 

பந்துவீச்சு

அஸ்வின்    2/23 
புவனேஷ்வர்    2/24 
முகமது சிராஜ்    1/39


இந்தியா - 166/5

சூர்யகுமார் யாதவ்    62 
ரோஹித் சர்மா    48 
ரிஷப் பந்த்    17 

பந்துவீச்சு

டிரென்ட் போல்ட்    2/31 
மிட்செல் சேன்ட்னர்    1/19 
டேரில் மிட்செல்    1/11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com