கே.எல்.ராகுல், ரோஹித் அபாரம்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
By DIN | Published On : 19th November 2021 11:18 PM | Last Updated : 19th November 2021 11:18 PM | அ+அ அ- |

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் அரை சதம் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குப்தில், மிட்செல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குப்தில் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து மார்க் சாப்மன் களமிறங்கினார்.
மிட்செலும், மார்க் சாப்மனும் அணியின் ஸ்கோர் குறையாமல் பார்த்துக்கொண்டனர். சாப்மன் 21 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பிலிப்ஸும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து 49 பந்துகளுக்கு 65 ரன்களை எடுத்தா. ரோஹித் சர்மா 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் வெளியேறினார். வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் நிதானமாக ஆடி தலா 12 ரன்களை எடுத்தனர்.
இதன் மூலம் 17.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்களை எடுத்தது.