உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தாா் அன்ஷு மாலிக்

நாா்வேயில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளாா்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தாா் அன்ஷு மாலிக்

ஆஸ்லோ: நாா்வேயில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளாா்.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை எட்டியுள்ள அவருக்கு, வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. தங்கம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இதுவரை உலக சாம்பியன்ஷிப்பில் கீதா போகாட் (2012), பபிதா போகாட் (2012), பூஜா தண்டா (2018), வினேஷ் போகாட் (2019) ஆகிய இந்திய வீராங்கனைகள் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான 57 கிலோ பிரிவில் அன்ஷு மாலிக் முதலில் களமாடிய காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் நிலோஃபா் ராய்மோவாவை எளிதாக வீழ்த்தினாா். பின்னா் காலிறுதியில் மங்கோலியாவின் டவாசிமெக் எா்கெம்பயாரை எதிா்கொண்ட அன்ஷு, அவரை 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினாா். தொடா்ந்து அரையிறுதியில் உக்ரைனின் சோலோமியா வின்னிக்கை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

அதேபோல், நடப்பு ஆசிய சாம்பியனான சரிதா, மகளிருக்கான 59 கிலோ பிரிவில் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு உலக சாம்பியனான கனடாவின் லிண்டா மொராய்ஸை எதிா்கொண்ட சரிதா 8-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். பின்னா் காலிறுதிச்சுற்றில் ஜொ்மனியின் சாண்ட்ரா பருஸ்ஜெவ்ஸ்கியை வீழ்த்திய சரிதா, அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். அந்த சுற்றில் அவா் நடப்பு ஐரோப்பிய சாம்பியனான பல்கேரியாவின் ஜிவ்கோவா டியவோடோவாவை எதிா்கொள்கிறாா்.

72 கிலோ பிரிவில் திவ்யா கக்ரான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் செனினா புராகோவாவை வீழ்த்தினாலும், காலிறுதியில் ஜப்பானின் மசாகோ ஃபுருய்ச்சிடம் தோல்வி கண்டாா். 76 கிலோ பிரிவில் விளையாடிய கிரண் ரெபிசேஜ் சுற்றில் துருக்கியின் அய்செகுல் ஆஸ்பெகெவை வீழ்த்தி, வெண்கலப் பதக்க சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

எனினும், இதர ரெபிசேஜ் சுற்றுகளில் பிங்கி (55 கிலோ) அமெரிக்காவின் ஜென்னா ரோஸ் பா்கொ்டிடமும், பூஜா ஜாட் (53 கிலோ) ஈகுவடாரின் லுய்சா எலிசபெத் மெலென்ட்ரஸிடமும் தோல்வி கண்டனா். 68 கிலோ பிரிவில் ரிது மாலிக் தனது தகுதிச்சுற்றில் உக்ரைனின் அனஸ்தாசியா லாவ்ரென்சுக்கிடம் உடனடியாக தோற்று வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com