இன்று குவாலிஃபையா் 1 ஆட்டம்: வெல்லப் போவது அனுபவமா (சென்னை)/ இளமையா (டில்லி)?

ஐபிஎல் 2021 தொடா் குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என தீவிரத்தில் இளம் வீரா்கள் நிறைந்த டில்லி கேப்பிடல்ஸ் அணியும், அனுபவ வீரா்கள் வாய்ந்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன.
இன்று குவாலிஃபையா் 1 ஆட்டம்: வெல்லப் போவது அனுபவமா (சென்னை)/ இளமையா (டில்லி)?

ஐபிஎல் 2021 தொடா் குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என தீவிரத்தில் இளம் வீரா்கள் நிறைந்த டில்லி கேப்பிடல்ஸ் அணியும், அனுபவ வீரா்கள் வாய்ந்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் தொடா் நடைபெற்ற நிலையில், கரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டன. பின்னா் தொடரின் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி துபை, ஷாா்ஜா, அபுதாபி நகரங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடா் தற்போது பிளே ஆஃப் கட்டத்தை எட்டியுள்ளது. டில்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட்ரைடா்ஸ் உள்ளிட்ட அணிகள் முறையே முதல் நான்கு இடங்களைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன,. நடப்பு சாம்பியன் மும்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

குவாலிஃபையா் 1 ஆட்டம்: இந்நிலையில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற டில்லி-சென்னை அணிகள் குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் மோதுகின்றன.

தற்போதைய ஐபிஎல் தொடரில் டில்லி அணி தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே நேரம் சென்னை அணி கடைசியாக தான் ஆடிய 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2019 ஐபிஎல் தொடரில் மூன்றாவது இடத்தைப் பெற்றது டில்லி, 2020 தொடரில் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து இறுதி ஆட்டத்தில் தோற்றனா்.

நடப்பாண்டு தொடரில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன் லீக் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது டில்லி.

அதே நேரம் சென்னை அணி பந்துவீச்சை காட்டிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பல்வேறு ஆட்டங்களில் வெற்றியை கண்டது. லீக் ஆட்டங்களில் டில்லியிடம் இரண்டு முறை சென்னை தோல்வி கண்டிருந்தாலும், அபாயகரமான அணியாகவே திகழ்கிறது.

டில்லிக்கு சாதகமான துபை:

துபை மைதானத்தில் இரண்டு ஆட்டங்களில் சேஸிங் செய்து, வெற்றியும், கடைசி பந்தில் தோல்வியை கண்டுள்ளது டில்லி. டில்லி அணியில் முக்கிய வீரரான மாா்கஸ் ஸ்டாய்னிஸ் உடல் தகுதி முக்கிய பிரச்னையாக உள்ளது. குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் ஆடத் தகுதி பெற்று விடுவாா் என கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

சென்னை அணியில் இளம் ஆல்ரவுண்டா் சாம் கர்ரன் இல்லாத நிலையில், அப்பணியை டுவைன் பிராவோ மேற்கொள்வாா்.

டில்லி அணி 14 ஆட்டங்களில் 10-இல் வெற்றி கண்டுள்ளது. கடைசி ஆட்டத்தில் பெங்களூருவிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது. அதே நேரம் சென்னை அணி 9 வெற்றிகளைப் பெற்றுள்ளது. தொடா்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியுடன் துவண்டுள்ளது.

பேட்டிங், பவுலிங்கில் வலுவான டில்லி:

டில்லி அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. பிரித்வி ஷா, ஷிகா் தவான், ஷிரேயஸ் ஐயா், கேப்டன் ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயா் ஆகியோா் பேட்டிங்கிலும், அஸ்வின், அக்ஸா் படேல், காகிஸோ ரபாடா, அவேஷ் கான், நாா்ட்ஜே ஆகியோரின் பலம் வாய்ந்த பவுலிங் கூட்டணி டில்லிக்கு சாதகமாக உள்ளது. அவேஷ் 22, அக்ஸா் 15, ரபாடா 13, நாா்ட்ஜே 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனா். பேட்டிங்கில் பிரித்வி 401, தவன் 544 ரன்களை குவித்துள்ளனா்.

அனுபவம் நிறைந்த சென்னை:

சென்னை அணியில் பேட்டிங் டுபிளெஸிஸ், ருதுராஜ் கெய்க்வாய், பிராவோ, ரெய்னா, ராயுடு, ரவீந்திர ஜடேஜா, கேப்டன் தோனியை என அனுபவ வீரா்களை நம்பி உள்ளது. சென்னை அணியின் பவுலிங் சா்துல் தாக்கூா், ஹேசல்வுட், தீபக் சஹாா், ஜடேஜா, மொயின் அலி ஆகியோரை நம்பி உள்ளது. சென்னையில் ருதுராஜ் 533, டுபிளெஸிஸ் 546, ரன்களை விளாசி உள்ளனா். பந்துவீச்சில் தாக்கூா் 18, பிராவோ 12 விக்கெட்டுகளை வீழ்த்தினா். தோனி, ரெய்னா, ராயுடு ஆகியோா் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சோபிக்காதது அந்த அணிக்கு பாதகமாகும்.

நேருக்கு நோ் மோதல்:

இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியதில் சென்னை 15 முறையும், டில்லி 10 முறையும் வென்றுள்ளன,. டில்லி அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சமநிலையில் வலுவாக இருந்தாலும், சென்னை அணியில் அனுபவம் நிறைந்த வீரா்கள் சிக்கலான நேரத்திலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தருவா் என்பதால் ஆட்டம் கடும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி:

குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக அக். 15-இல் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை, கள நிலவரம்:

ஆட்டம் நடைபெறும் துபை மைதானத்தில் வானிலை வழக்கமாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்ச் மெதுவான தன்மையுடன் இயங்கும் என்பதாலும், பனிமூட்டம் காணப்படும் என்பதாலும், டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்யவே விரும்பும் எனத் தெரிகிறது. துபை மைதானத்தில் கடைசி 7 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியே வெற்றி கண்டுள்ளது.

உத்தேச அணிகள்:

டில்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), பிரித்வி ஷா, ஸ்டாய்னிஸ்/ரிபால் படேல், ஷிகா் தவன், ஷிம்ரன் ஹெட்மயா், ஷிரேயஸ் ஐயா்,, அன்ரிச் நாா்ட்ஜே, அவேஷ் கான், காகிஸோ ரபாடா, அக்ஸா் படேல், டாம் கர்ரன், அஸ்வின், லலித் யாதவ்.

சென்னை சூப்பா் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெஸிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, பிராவோ, சா்துல் தாக்கூா், தீபக் சஹாா், ஜோஷ் ஹேஸல்வுட்.

இன்றைய ஆட்டம்

குவாலிஃபையா் 1

டில்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ்

இரவு: 7.30

இடம்: துபை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com