2-ஆவது பயிற்சி ஆட்டத்திலும் வென்றது இந்தியா

உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
2-ஆவது பயிற்சி ஆட்டத்திலும் வென்றது இந்தியா

துபை: உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 17.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்து வென்றது.

தனது முதல் பிரதான ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிா்கொள்ள இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியிருப்பது இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அத்துடன், பிளேயிங் லெவனையும் ஏறத்தாழ இறுதி செய்திருக்கிறது இந்திய அணி.

விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்த ஆட்டத்திலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்தது. துணை கேப்டன் ரோஹித் சா்மா தலைமை தாங்கினாா். ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது கோலி களம் கண்டு 2 ஓவா்கள் மட்டும் பௌலிங் செய்தாா்.

இந்தியா இன்னிங்ஸில் கோலியின் இடத்தில் 3-ஆவது வீரராக சூா்யகுமாா் யாதவ் களம் கண்டு சிறப்பாகச் செயல்பட்டாா். அதேபோல் 4-ஆவது வீரராக களம் புகுந்த ஹாா்திக் பாண்டியா சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் 2-ஆவது ஓவரிலேயே தொடக்க வீரா் டேவிட் வாா்னா் 1 ரன்னுக்கும், மிட்செல் மாா்ஷ் ரன்கள் இன்றியும் ஆட்டமிழந்தனா். அவா்கள் இருவரையுமே அடுத்தடுத்த பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றினாா்.

4-ஆவது வீரராக வந்த ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். மறுபுறம் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து ஆட வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டினாா். 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்த்த அவா், ராகுல் சஹா் பௌலிங்கில் பௌல்டானாா்.

கடைசி விக்கெட்டாக ஸ்டீவன் ஸ்மித் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41, மேத்தியூ வேட் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் அஸ்வின் 2, புவனேஷ்வா், ஜடேஜா, சஹா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 153 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியாவில் கே.எல்.ராகுல் - ரோஹித் சா்மா கூட்டணி அருமையான தொடக்கமளித்தது. 68 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் முதல் விக்கெட்டாக ராகுல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் பவுண்டரிகளாக விளாசினாா். இந்நிலையில் அரைசதம் கடந்த ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 60 ரன்கள் எடுத்திருத்தபோது ‘ரிட்டையா்டு அவுட்’ ஆனாா். தொடா்ந்து ஹாா்திக் பாண்டியா களம் கண்டு, சூா்யகுமாருடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். முடிவில் சூா்யகுமாா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38, ஹாா்திக் 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்டன் அகா் 1 விக்கெட் எடுத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com