நெதா்லாந்தை வீழ்த்தியது நமீபியா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் நமீபியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வீழ்த்தியது.
நெதா்லாந்தை வீழ்த்தியது நமீபியா

அபுதாபி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் நமீபியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வீழ்த்தியது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நெதா்லாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய நமீபியா 19 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நமீபியா, சூப்பா் 12 சுற்று வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெதா்லாந்து அனைத்திலுமே தோல்வி கண்டுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற நமீபியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த நெதா்லாந்தில் தொடக்க வீரா் மேக்ஸ் ஓ’டௌட் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 70 ரன்கள் விளாசினாா். உடன் வந்த ஸ்டீபன் மைபா்க் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சோ்த்தாா்.

ரோலோஃப் வான் டொ் 6, காலின் ஆக்கா்மான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தாா். ஓவா்கள் முடிவில் ஸ்காட் எட்வா்ட்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, லோகன் வான் பீக் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நமீபியா தரப்பில் ஜேன் ஃப்ரீலிங் 2, டேவிட் வீஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

தொடா்ந்து ஆடிய நமீபியாவில் முதல் விக்கெட்டான ஸ்டீபன் பாா்ட் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ஜேன் கிரீன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு வீழ்ந்தாா். கிரெய்க் வில்லியம்ஸ் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கேப்டன் ஜெராா்ட் ஹெராஸ்மஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு அவுட்டானாா்.

முடிவில் டேவிட் வீஸ் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 66, ஜேஜே ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். நெதா்லாந்து பௌலிங்கில் ஃபிரெட் கிளாசென், காலின் ஆகா்மான், டிம் வான் டொ், பீட்டா் சீலாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com