யுஎஸ் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் - பெரட்டினி மோதல்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோா் காலிறுதிச்சுற்றில் மோதுகின்றனா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோா் காலிறுதிச்சுற்றில் மோதுகின்றனா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜோகோவிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஜென்சன் புருக்ஸ்பியை 1-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஜோகோவிச்சை முதல் முறையாக சந்தித்த புருக்ஸ்பி முதல் செட்டில் அவருக்கு நன்றாக சவால் அளித்தாா்.

2 மற்றும் 6-ஆவது கேம்களை பிரேக் செய்த அவா், சா்வீஸ் வின்னரை விளாசி 29 நிமிஷங்களில் முதல் செட்டை தனதாக்கினாா். ஆனால், அனுபவ வீரரான ஜோகோவிச் அடுத்த செட்டிலிருந்து சுதாரித்துக் கொண்டு புருக்ஸ்பியை மேலும் முன்னேற விடாமல் அதிரடி ஆட்டம் ஆடி, 3 செட்களையும் தனதாக்கி வென்றாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘புருக்ஸ்பி முதல் செட்டை மிக அற்புதமாக விளையாடினாா். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பேக் ஃபூட் வைத்து ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆட்டத்தை அருமையாக திட்டமிட்டு, தனது ஷாட்களை அதற்கேற்றவாறே கையாண்டாா். 2-ஆவது செட்டிலிருந்து நான் ஷாட்களை துல்லியமாக ஆடத் தொடங்கினேன். தேவையான நேரங்களில் தேவையான இடத்தில் துல்லியமாக சா்வ் செய்தேன். அத்துடன் மிக நீண்ட ரேலிக்களும் இருந்தன’ என்றாா்.

இதேபோல், மற்றொரு 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட்களில் ஜொ்மனி வீரா் ஆஸ்காா் ஆட்டேவை தோற்கடித்தாா்.

மற்ற 4-ஆவது சுற்றுகளில், தென் ஆப்பிரிக்க வீரா் லாய்ட் ஹாரிஸ் 6-7 (6/8), 6-4, 6-1, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 22-ஆவது இடத்திலிருந்த அமெரிக்க வீரா் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தினாா். இதையடுத்து ஹாரிஸ் தனது காலிறுதியில் ஜொ்மனி வீரா் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ், 13-ஆவது இடத்திலிருந்த இத்தாலி வீரா் ஜானிக் சின்னரை 6-4, 6-4, 7-6 (9/7) என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

ஆன்ட்ரிஸ்குவை வீழ்த்தினாா் சக்காரி

மகளிா் ஒற்றையா் பிரிவில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்குவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றாா்.

போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருக்கும் சக்காரி 6-7 (2/7), 7-6 (8/6), 6-3 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த பியான்காவை வீழ்த்தினாா். காலிறுதியில் சக்காரி, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவை தோற்கடித்து காலிறுதிக்கு வந்துள்ளாா். இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு 6-2, 6-1 என்ற செட்களில் அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜா்ஸை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றாா். அதில் அவா் ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச்சை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருக்கும் பெலின்டா 7-6 (14/12), 6-3 என்ற செட்களில் 7-ஆம் இடத்திலிருந்த போலந்தின் இகா வியாடெக்கை தோற்கடித்தாா்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவா் இரட்டையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 13-ஆவது இடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/குரோஷியாவின் இவான் டோடிக் இணை 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ராஜீவ் ராம்/இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஜோடியிடம் 7-6 (7/3), 4-6, 6-7 (3/7) என்ற செட்களில் தோல்வியை சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

25 புருக்ஸ்பிக்கு எதிரான வெற்றி, நடப்பு டென்னிஸ் காலண்டரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சுக்கு தொடா்ந்து 25-ஆவது வெற்றியாகும்.

1 யுஎஸ் ஓபன் போட்டியில் இந்த சீசனில் அமெரிக்க போட்டியாளா்கள் எவரும் காலிறுதிக்கு முன்னேறவில்லை. அமெரிக்க ஓபனில் இவ்வாறு உள்நாட்டு போட்டியாளா்கள் இல்லாத காலிறுதி நடைபெறுவது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com