இந்தியா சாதிக்குமா? இங்கிலாந்து சமன் செய்யுமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை ஓல்டு டிராஃபோர்டில் தொடங்குகிறது. 
இந்தியா சாதிக்குமா? இங்கிலாந்து சமன் செய்யுமா?

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை ஓல்டு டிராஃபோர்டில் தொடங்குகிறது. 
5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கிறது. இந்த கடைசி டெஸ்டில் வெல்லும் பட்சத்தில் 2007-க்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற சாதனையை இந்தியா எட்டும். அத்துடன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து வென்று தந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி எட்டுவார். ஆனால், இதற்கு தடையை ஏற்படுத்தும் விதமாக இந்த ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து இருக்கிறது. 
ஆனாலும், ஆட்டத்தின் முதல் இரு நாள்களுக்கு மழை இருக்கலாம் என  கணிக்கப்பட்டுள்ளதால், ஆட்டம் சமன் ஆவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஆகும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு சாதகமாகும். 
இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை, இந்திய அணியில் முக்கிய விவகாரமாக இருப்பது பெüலர் ஜஸ்பிரீத் பும்ராவின் பணிச்சுமையும், பேட்ஸ்மேன் அஜிங்க்ய ரஹானேவின் மோசமான ஃபார்மும் தான். இவை இரண்டுமே இந்தியாவின் வெற்றியை பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த ஒரு மாதமாக இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 151 ஓவர்கள் வீசியிருக்கிறார் பும்ரா. மறுபுறம், 7 இன்னிங்ஸ்களில் 6-இல் மோசமாக விளையாடியிருக்கிறார் ரஹானே. 
ஒருவேளை ரஹானே பிளேயிங் லெவனிலிருந்து விடுவிக்கப்பட்டால், அந்த இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவர் பரிசீலிக்கப்படலாம். பும்ராவுக்கு சற்று ஓய்வளிக்க யோசித்தால், முகமது ஷமி அல்லது முகமது சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். கரோனா பாதிப்பு காரணமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பெüலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் இல்லாத நிலையில் இந்த விவகாரத்தில் கோலி மேற்கொள்ள இருக்கும் முடிவு மிக முக்கியமானது. 
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, அணியின் ஒரே நம்பிக்கையாக கேப்டன் ரூட் இருக்கிறார். இந்தத் தொடரில் மட்டும் அவர் 600 ரன்களை கடக்க இருக்கிறார். பிளேயிங் லெவனில் அவருக்கு உறுதுணையாக ஜோஸ் பட்லர் இருக்கிறார். இதனால் ஜானி பேர்ஸ்டோவுக்கு ஓய்வளிக்கப்படலாம். 
ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரெய்க் ஓவர்டன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் எனத் தெரியும் நிலையில், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை பதம் பார்க்க முயற்சிப்பர். 
ய்யுமா?

உத்தேச பிளேயிங் லெவன் 

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, 
கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர். 
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, மொயீன் அலி, ஜோஸ் பட்லர், ஆலி ராபின்சன், மார்க் வுட், ஜேக் லீச், ஆலி போப், டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ். 

சந்தேகத்துக்கு இடமாகிறது கடைசி டெஸ்ட்? 


இந்திய அணியின் ஜூனியர் பிசியோ யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. 

ஏற்கெனவே, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததால் அணியின் பிரதான பிசியோ நிதின் படேல், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பெüலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது ஜூனியர் பிசியோவும் தனிமைப்படுத்தப்பட்டதால், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டுமே அணியினருடன் இருக்கிறார். அணி வீரர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக அணி நிர்வாகம் காத்திருக்கிறது. கடைசி டெஸ்ட் நடைபெறுவது சந்தேகத்துக்கு இடமாக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் செüரவ் கங்குலி கூறியுள்ளார். 

இதனிடையே, இந்திய அணிக்காக மாற்று பிசியோவை ஏற்பாடு செய்யுமாறு இங்கிலாந்து வாரியத்திடம் பிசிசிஐ கோரியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com