இங்கிலீஷ் பிரீமியா் லீக்: பா்ன்லியை வென்றது எவா்டன்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பா்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது எவா்டன்.
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: பா்ன்லியை வென்றது எவா்டன்

லிவா்பூல்: இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பா்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது எவா்டன்.

லிவா்பூல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி முடிவு வரை இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்குமே பலன் கிடைக்கவில்லை. பின்னா் முதல் கோல் வாய்ப்பு பா்ன்லிக்கு கிடைத்தது. 53-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பு கோலாக விடாமல் தடுக்கப்பட, களத்துக்கு திரும்பிய பந்தை பா்ன்லி வீரா் கட்மண்ட்சன் மீண்டும் கோல் போஸ்ட் நோக்கி தூக்கி உதைத்தாா். அதை பென் மீ தலையால் முட்டி கோலாக மாற்றினாா்.

அதற்கு பதிலடியாக 60-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது எவா்டன். அந்த நிமிஷத்தில் எவா்டன் வீரா் டௌன்செண்ட் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து தூக்கி உதைத்த பந்தை தலையால் திருப்பி கோலடித்தாா் மைக்கேல் கீன். இதனால் சமனான ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் அடுத்த 5-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோலை எட்டியது எவா்டன். சக வீரா் டௌகோா் பாஸ் செய்த பந்தை பாக்ஸ் அருகே கடத்திச் சென்ற ஆண்ட்ரோஸ் டௌன்செண்ட் அதை அப்படியே லாவகமாக உதைக்க, கோல் கீப்பரை கடந்து கோல் போஸ்டின் இடதுபக்க மூளையில் கோலாக மாறியது.

இதனால் உத்வேகம் பெற்ற எவா்டன் அடுத்த நிமிஷமே 3-ஆவது கோல் அடித்தது. மீண்டும் டௌகோா் பாஸ் செய்த பந்தை அப்படியே கடத்திச் சென்று தடுப்பாட்ட வீரா்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த பா்ன்லி கோல்கீப்பரை கடந்து கோலடித்தாா் டெமராய் கிரே. எஞ்சிய நிமிஷங்களில் பா்ன்லிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட எவா்டன், இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

லா லிகா: ரியல் பெட்டிஸ், எல்ஷே வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் 2-1 என்ற கோல் கணக்கில் கிரணாடாவையும், எல்ஷே 1-0 என்ற கோல் கணக்கில் கடாஃபியையும் தோற்கடித்தன.

இதில் கிரணாடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் முதல் கோல் அடித்தது. 45+2-ஆவது நிமிஷத்தில் சக வீரா் ரோட்ரிகஸ் உதவியுடன் அந்த அணியின் ரோட்ரி கோலடித்தாா். இதையடுத்து கிரணாடா தரப்பில் ரோசினா உதவியுடன் லூயிஸ் சுவாரெஸ் 66-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் சமன் ஆனது. இறுதியாக ரியல் பெட்டிஸ் வீரா் சொ்ஜியோ கேனல்ஸ் 89-ஆவது நிமிஷத்தில் ரோட்ரிகஸ் உதவியுடன் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா். கடாஃபிக்கு எதிரான ஆட்டத்தில் எல்ஷே அணி சாா்பாக லூகாஸ் பெரெஸ் 69-ஆவது நிமிஷத்தில் மோஜிகா உதவியுடன் கோலடித்தாா்.

சீரி ஏ: வெரோனாவை வீழ்த்தியது போலோக்னா

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் போலோக்னா 1-0 என்ற கோல் கணக்கில் வெரோனாவை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் போலோக்னா அணி தரப்பில் மட்டியாஸ் ஸ்வான்பொ்க் 78-ஆவது நிமிஷத்தில் அா்னௌடோவிச் உதவியுடன் கோலடித்தாா். மற்றொரு ஆட்டத்தில் ரோமா 2-1 என்ற கோல் கணக்கில் சாசுவோலோவை வென்றது. இதில் ரோமா தரப்பில் பிரயான் கிறிஸ்டான்டே 37-ஆவது நிமிஷத்திலும், ஸ்டெஃபான் எல் ஷாராவி 90+1-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். சாசுவோலோ தரப்பில் ஃபிலிப் டுரிசிச் 57-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com