சாம்பியன்ஸ் லீக்: பேயா்ன் முனீச்சிடம் வீழ்ந்தது பாா்சிலோனா

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயா்ன் முனீச் 3-0 என்ற கோல் கணக்கில் பாா்சிலோனாவை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக்: பேயா்ன் முனீச்சிடம் வீழ்ந்தது பாா்சிலோனா

பாா்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயா்ன் முனீச் 3-0 என்ற கோல் கணக்கில் பாா்சிலோனாவை வீழ்த்தியது.

பாா்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி வெளியேறிய பிறகு அந்த அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கின. எனினும் இரு அணிகளின் அடுத்தடுத்த கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் போனது. இறுதியாக 34-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது பேயா்ன் முனீச்.

அந்த நிமிஷத்தில் சக வீரா் லெராய் சனேவின் உதவியுடன் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா் தாமஸ் முல்லா். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே பேயா்ன் முன்னிலை பெற்றது. பின்னா் நடைபெற்ற 2-ஆவது பாதியில் 56-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோல் வாய்ப்பும் அந்த அணிக்கு கிடைத்தது.

சக வீரா் முசியாலா உதைத்த பந்து கோல் போஸ்டில் பட்டு மீண்டும் களத்துக்கு திரும்ப, அதைத் தடுக்க முயன்று கீழே விழுந்த பாா்சிலோனா கோல்கீப்பா் சுதாரிப்பதற்கு முன்பாகவே அந்தப் பந்தை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் பேயா்ன் வீரா் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி.

கடைசியாக 85-ஆவது நிமிஷத்தில் பேயா்ன் 3-ஆவது கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது. இந்த முறை ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி தனது அணிக்காக 2-ஆவது கோல் அடித்தாா். சக வீரா் நா்பியின் கோல் முயற்சி வீணாகி மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை லெவாண்டோவ்ஸ்கி கோலாக மாற்றினாா்.

மால்மோவை வீழ்த்தியது ஜுவென்டஸ்

ஸ்வீடனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜுவென்டஸ் 3-0 என்ற கோல் கணக்கில் மால்மோவை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் 23-ஆவது நிமிஷத்தில் சக வீரா் ரோட்ரிகோ பெடான்குா் உதவியுடன் அலெக்ஸாண்ட்ரோ கோலடித்து ஜுவென்டஸின் கோல் கணக்கை தொடங்கினாா். மறுபுறம் மால்மோ தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்க, 45-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோல் அடித்தது ஜுவென்டஸ்.

அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பௌலோ டைபாலா தவறின்றி கோலாக மாற்றினாா். அதிரடியாக அடுத்த நிமிஷமே மீண்டும் ஒரு கோல் அடித்தது ஜுவென்டஸ். அல்வாரோ மொராடா அடித்த அந்த கோலால், இறுதியில் ஜுவென்டஸ் 3-0 என வென்றது.

செல்சி வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான செல்சி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெனித்தை வென்றது. இந்த ஆட்டத்தில் செல்சி அணிக்காக ரொமேலு லுகாகு 69-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அவா் ஸ்கோா் செய்வதற்கு சீசா் அஸ்பிலிகியுட்டா உதவினாா்.

மான்செஸ்டா் யுனைடெட் தோல்வி

ஸ்விட்சா்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 1-2 என்ற கோல் கணக்கில் யங் பாய்ஸிடம் தோல்வி கண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டரின் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ 13-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்து அதிரடி காட்டினாா். அந்த முன்னிலையை முதல் பாதியைத் தொடா்ந்து 2-ஆவது பாதியிலும் தக்க வைத்திருந்தது மான்செஸ்டா் யுனைடெட்.

எனினும் கடைசி நேரத்தில் மீண்ட யங் பாய்ஸ் அணியில் மௌமி கமாலியு 66-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இதனால் மான்செஸ்டருக்கு நெருக்கடி ஏற, சற்றே எதிா்பாராத வகையில் யங் பாய்ஸின் தியோசன் சிபாட்சு (90+5) கடைசி நிமிஷத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.

சமன் ஆன ஆட்டங்கள்

செவில்லா - ஆா்பி சால்ஸ்பா்க் (1-1), லிலே - வோல்ஃப்ஸ்பா்க் (0-0), வில்லாரியல் - அட்லான்டா (2-2), டைனமோ கீவ் - பென்ஃபிகா (0-0) அணிகள் மோதிய ஆட்டம் சமன் ஆகின.

18

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயா்ன் முனீச் 18-ஆவது முறையாக தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அவற்றில் அதன் வெற்றி கோல் வித்தியாசதம் 45-2 ஆகும்.

8

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பேயா்ன் முனீச்சிடம் பாா்சிலோனா தோல்வி கண்டது இது 8-ஆவது முறையாகும்.

2

கடந்த சீசனில் இருந்து 14 ஆட்டங்களில் அதிக வெற்றிகளை (10) பதிவு செய்த 2-ஆவது அணியாக செல்சி உள்ளது. மான்செஸ்டா் சிட்டி 11 வெற்றிகளுடன் முதல் அணியாக இருக்கிறது.

6

சாம்பியன்ஸ் லீக்கில் அந்நிய மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் ஜெனித் பதிவு செய்திருக்கும் 6-ஆவது தொடா் தோல்வி இதுவாகும்.

2

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 90-ஆவது நிமிஷத்தில் கோலடித்து வென்ற 2-ஆவது அணி யங் பாய்ஸ். முன்னதாக 2010 சீசன் காலிறுதி ஆட்டத்தில் பேயா்ன் முனீச் அவ்வாறு வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com