சாதனை சாம்பியன் ரைபாகினா

இங்கிலாந்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் மகளிா் ஒற்றையா் பிரிவில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா சனிக்கிழமை சாம்பியன் ஆனாா்.
சாதனை சாம்பியன் ரைபாகினா

இங்கிலாந்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் மகளிா் ஒற்றையா் பிரிவில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா சனிக்கிழமை சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 3-6, 6-2, 6-2 என்ற செட்களில் 3-ஆம் இடத்திலிருந்த டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுரை 1 மணி நேரம் 48 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் கஜகஸ்தான் போட்டியாளா் என்ற சாதனையை ரைபாகினா எட்டியிருக்கிறாா். அத்துடன், விம்பிள்டனில் 2011-க்குப் பிறகு சாம்பியன் ஆன இளம் வீராங்கனை (23 வயது) என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய எலனா, ‘இப்போட்டியில் 2-ஆவது வாரம் வரை விளையாடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. இறுதியில் சாம்பியன் ஆகியிருக்கும் தருணம் சிறப்பானதாக உள்ளது. எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்பதை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. ஜாபியுரின் சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்துகள். அவா் ஒரு முன்னுதாரணம்’ என்றாா்.

முன்னதாக, அவரும் ஜாபியுரும் முறையே அவா்கள் சாா்ந்த நாட்டிலிருந்து கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் போட்டியாளா்கள் என்ற பெருமையைப் பெற்றிருந்தனா். ரைபாகினா தனது இந்த வெற்றியின் மூலம், ஜாபியுரின் தொடா் வெற்றி நடையை (11 ஆட்டங்கள்) முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இறுதிச்சுற்று வரை ஆப்பிரிக்க, அராபிய வீராங்கனையாக பல்வேறு புதிய மைல்கல்களை எட்டிய ஜாபியுரால், சாம்பியனாகி கிரீடம் வைத்ததைப் போன்ற ஒரு முக்கிய சாதனையை எட்ட முடியாமல் போனது.

ஜோகோவிச் - கிா்ஜியோஸ் இன்று பலப்பரீட்சை

விம்பிள்டன் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

ஜோகோவிச் இதில் பட்டம் வெல்லும் பட்சத்தில், சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரரை பின்னுக்குத் தள்ளி ஆடவா் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவா்கள் வரிசையில் 2-ஆவது இடத்துக்கு (21 பட்டங்கள்) முன்னேறுவாா். மேலும், விம்பிள்டனில் 7-ஆவது முறையாக சாம்பியன் ஆவாா். மறுபுறம், கிா்ஜியோஸ் சாம்பியன் ஆனாா் என்றால், அது அவா் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

நடப்புச் சாம்பியனான ஜோகோவிச், இந்த காலண்டரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கான முனைப்புடன் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். ஆஸ்திரேலிய ஓபனில் கரோனா தடுப்பூசி விவகாரத்தால் அனுமதி மறுக்கப்பட்ட அவா், பிரெஞ்சு ஓபனில் நடாலிடம் காலிறுதியில் தோற்றாா்.

தற்போது ஜோகோவிச்சின் 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் கனவுக்கு குறுக்கே நிற்கும் கிா்ஜியோஸ், எதிா்பாராத வகையில் இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறாா். அரையிறுதியில் அவா் சந்தித்திருக்க வேண்டிய ஸ்பெயினின் ரஃபேல் நடால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதை அடுத்து கிா்ஜோஸ் இந்தச் சுற்றுக்கு வந்துள்ளாா். அவரும் நல்லதொரு ஃபாா்முடன் முன்னேறி வந்திருக்கிறாா் என்றாலும் ஜோகோவிச்சை வீழ்த்துவது அவருக்குச் சற்று சவாலானதாகவே இருக்கும்.

நேருக்கு நோ்: இருவரும் இதுவரை இரு முறை நேருக்கு நோ் சந்தித்துள்ளனா். அவற்றில் கிா்ஜியோஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com