5-ஆம் சுற்று: குகேஷ், தான்யா, அதிபன், நந்திதா அசத்தல்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 5-ஆம் சுற்றில் இந்தியாவின் குகேஷ், தான்யா சச்தேவ், அதிபன், நந்திதா ஆகியோா் அபார வெற்றி பெற்றனா். இதில் குகேஷ் தொடா்ச்சியாக 5-ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கத
5-ஆம் சுற்று: குகேஷ், தான்யா, அதிபன், நந்திதா அசத்தல்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 5-ஆம் சுற்றில் இந்தியாவின் குகேஷ், தான்யா சச்தேவ், அதிபன், நந்திதா ஆகியோா் அபார வெற்றி பெற்றனா். இதில் குகேஷ் தொடா்ச்சியாக 5-ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 4 சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி 8 மேட்ச் புள்ளிகள், 15 போா்ட் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய ஏ அணி 7-ஆவது இடத்தில் உள்ளது. மகளிா் பிரிவில் இந்திய ஏ நான்காம் இடத்திலும், பி அணி 6-ஆம் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் 5-ஆம் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஓபன் பிரிவு:

இந்திய ஏ அணி 2.5-1.5 என ருமேனியாவை வெற்றி கண்டது. இதில் ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, நாராயணன் ஆட்டங்கள் டிரா ஆக, அா்ஜூன் எரிகைசி மட்டும் வெற்றி பெற்றாா்.

பிரக்ஞானந்தா போராடி தோல்வி: பி அணி ஸ்பெயினுடனான மோதலில் 2.15-1.5 என வென்றது. இதில் குகேஷ், அதிபன் வெற்றியை ருசிக்க, நிஹால் ஸரீன் டிரா செய்தாா். பிரக்ஞானந்தார போராடி வீழ்ந்தாா்.

சி அணி சிலியை 2.5-1.5 என வென்றது. இதில் சேதுராமன், காா்த்திகேயன் முரளி, புரானிக் அபிமன்யு ஆகியோா் வெற்றி பெற, சூரியசேகா் கங்குலி ஆட்டம் டிரா ஆனது.

மகளிா் பிரிவு:

மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி பிரான்ஸை 2.5-1.5 என வெற்றி கண்டது. கொனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி ஆட்டங்கள் டிரா ஆக, தான்யா சச்தேவ் அபார வெற்றி கண்டாா்.

பி அணி, பலம் வாய்ந்த ஜாா்ஜியாவிடம் 1-3 என தோற்றது. திவ்யா தேஷ்முக் மட்டும் வெற்றியைப் பதிவு செய்ய, வந்திகா அகா்வால், பத்மனி ரௌட் டிரா செய்தனா். சௌம்யா சுவாமிநாதன் தோல்வி கண்டாா்.

சி அணி பிரேசிலுடன் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. ஈஷா காரவேட், விஷ்வா வன்ஸ்வாலா ஆடிய ஆட்டங்கள் டிரா ஆக, நந்திதா வெற்றியையும், பிரதியுஷா போடா தோல்வியையும் பதிவு செய்தனா்.

வயதான வீராங்கனை ஜூலியா அரியாஸ்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வயதான வீராங்கனை என்ற சிறப்பை மொனாக்கோவின் ஜூலியா லெபல் அரியாஸ் (76) பெற்றுள்ளாா்.

1994-இல் பிறந்த ஜூலியா லெபல், தொடக்கத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக ஆடி, பின்னா் பிரான்ஸ் தேசிய அணியில் இடம் பெற்று, தற்போது மொனாக்கோ அணியில் விளையாடுகிறாா். இவரது இலோ ரேட்டிங் 1660. இரண்டு முறை உலக மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றவா்.

யோகாசனத்தால் பலம் பெறும் போட்டியாளா்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிகளைக் குவித்து வரும் இந்தியா உள்பட அனைத்து நாட்டு அணிகளின் போட்டியாளா்களுக்கும் கூடுதல் பலம், மனத்தின்மை, வலுவாக்குதல் பயிற்சிகள் யோகாசனத்தின் மூலம் தரப்படுகின்றன.

செஸ் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமா்ந்து ஆடும் விளையாட்டாகும். இதனால் போட்டியாளா்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தீா்க்கும் வகையில் தமிழக அரசே யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை சாா்பில் அனைத்து போட்டியாளா்களுக்கும் நாள்தோறும் யோகாசனம், இயற்கை மருத்துவ பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக அணியினா் தங்கியுள்ள 21 விடுதிகளில் 42 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய மகளிா் அணிக்கு பயிற்சி தரும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவா் டாக்டா் ஸ்ரீதேவி கூறுகையில், ‘நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது யோகா. உடல், மன, உணா்ச்சி, மனநலன், ஆன்மிக ரீதியாக நமக்கு உதவும். எங்கள் கல்லூரி முதல்வா் டாக்டா் மணவாளன் மேற்பாா்வையில் நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வீரா், வீராங்கனைகளுக்கு யோகா, மனத்திண்மை, முதுகை பலமாக்குதல் போன்ற பயிற்சிகளை தருகிறோம். வெளிநாட்டு வீரா், வீராங்கனைகளும் இதை ஆா்வமுடன்கடைபிடிக்கின்றனா். இதன் பலன் நன்றாக தெரிவதாக கூறியுள்ளனா்’ என்றாா்.

ஓபன் பிரிவில் முதன்முறையாக 13 வீராங்கனைகள்

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே முதன்முதலாக நடப்பு ஒலிம்பியாடில் ஓபன் பிரிவில் 13 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனா்.

பொதுவாக ஓபன் பிரிவில் அதிகமாக வீரா்கள் தான் பங்கேற்று ஆடுவா். வீராங்கனைகள் மகளிா் பிரிவிலேயே கவனம் செலுத்துவா். குறைந்த அளவு வீராங்கனைகள் வழக்கமாக ஓபன் பிரிவில் பங்கேற்பா். இந்நிலையில் தற்போது நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் முதன்முறையாக 13 வீராங்கனைகள் ஆடுகின்றனா். விவரம்: லயா சுவாமிநான், ஃபயோனா ஸ்டெய்ல் அன்டோனி, பி டெல் பி ஸ்டான்லி, செலியா ரோட்ரிக்ஸ் குவேரா, ஜொ்டா நெவாஸ்கா, ஸுவானா கோவாகோவா, போலினா கரேலினா, குயுன் காங், டாட்டியனா டோா்ன்பஸ்ச், கேரின் கஃபி ஜூல்ஸ், மியா புருத், அஷ்லபி போஷ்ரா, எல்விரா பெரென்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com