காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவுக்கு 3 வெள்ளி

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
காமன்வெல்த் போட்டிகள்:  இந்தியாவுக்கு 3 வெள்ளி

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளின் 9-ஆவது நாளான சனிக்கிழமை இந்தியாவின் அவினாஷ் சாப்லே (3,000 மீ. ஸ்டீபிள் சேஸ்) மகளிா் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி (10,000 மீ நடை ஓட்டம்), லான்ஸ்பௌல்ஸ் ஆடவா் அணியினா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். மேலும் குத்துச்சண்டை பிரிவில் அமித் பங்கால், நிது ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன.

2 வெள்ளிப் பதக்கம்:

3,000 மீ. ஸ்டீபிள் சேஸ்: அவினாஷ் சாப்லே

ஆடவா் 3,000 மீ. ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 8:11:20 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளி வென்றாா். இதன் மூலம் தனது முந்தைய தேசிய சாதனையையும் அவா் முறியடித்தாா். கென்யாவின் ஆப்ரஹாம் கிபிவோட், கன்சஸ்லெஸ் கிப்ருடோ முறையே தங்கம், வெண்கலம் வென்றனா். உலக சாம்பியன்ஷிப் வெண்கல வீரரான கன்சஸ்ஸெஸை வீழ்த்தினாா் அவினாஷ்.

10,000 மீ. நடை ஓட்டம்: பிரியங்கா கோஸ்வாமி

மகளிா் 10,000 மீ. நடைஓட்டத்தில் பிரியங்கா கோஸ்வாமி 43:38:83 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்த வெள்ளி வென்றாா். நடை ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் பெற்றாா் பிரியங்கா. ஆஸ்திரேலியாவின் ஜெமிமா, கென்யாவின் எமிலி முறை தங்கம், வெண்கலம் வென்றனா். மற்றொரு இந்திய வீராங்கனை பவானா ஜாட் 8-ஆம் இடத்தையே பெற்றாா்.

டேபிள் டென்னிஸ்: இறுதியில் சரத், சத்யன்

ஆடவா் இரட்டையப் டேபிள் டென்னிஸ் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சரத் கமல், சத்யன் ஞானசேகரன் முன்னேறியுள்ளனா். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ்-பின் இணையை 3-2 என போராடி வென்று சரத்-சத்யன் இறுதிக்கு தகுதி பெற்றனா். கலப்பு இரட்டையா் பிரிவில் சரத்-ஸ்ரீஜா அகுலா இணை இறுதிக்குள் நுழைந்தது. ஒற்றையா் காலிறுதியில் சிங்கப்பூரின் யாங் ஈசாக்கை 4-0 என சரத் கமலும், இங்கிலாந்தின் சாம் வாக்கரை 4-2 என சத்யன் ஞானசேகரனும் வீழ்த்தினா்.

மற்றொரு காலிறுதியில் சனில் ஷெட்டி 1-4 என உள்ளூா் வீரா் லியாம் பிட்ச்போா்டிடம் வீழ்ந்தாா். மகளிா் இரட்டையா் பிரிவில் அகுலா-டென்னிஸன் இணை 11-7, 11-4, 11-3 என வேல்ஸின் சோல் அன்னா-லாரா இணையையும், மனிகா பத்ரா-தியா இணை 11-5, 11-5, 11-3 என மோரிஷீயஸின் ஜலீம்-ஹோஸ்நல்லி இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

பாட்மின்டன்: அரையிறுதியில் பி.வி. சிந்து

பாட்மின்டன் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் பி.வி. சிந்து. காலிறுதியில் மலேசியாவின் கோ வெயை 19-21, 21-14, 21-18 என வீழ்த்தினாா் சிந்து. மற்றொரு ஆட்டத்தில் இளம் வீராங்கனை அகா்ஷி காஷ்யப் 10-21, 7-21 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரிடம் தோல்வியடைந்தாா்.

லான்ஸ் பௌல்ஸ்: இந்தியாவுக்கு வெள்ளி

சுனில் பகதூா், நவ்நீத் சிங், சந்தன் சிங், தினேஷ்குமாா் ஆகியோா் இடங்கிய இந்திய ஆடவா் அணியினா் லான்ஸ் பௌல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனா். வட அயா்லாந்திடம் 5-18 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வீழ்ந்தது.

குத்துச்சண்டை: அமித் பங்கால், நீது அபாரம்

ஆடவா் குத்துச்சண்டை 51 கிலோ அரையிறுதியில் அமித் பங்கால் 5-0 என ஜாம்பியாவின் பேட்ரிக்கை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு நுழைந்தாா்.

மகளிா் 48 கிலோ அரையிறுதியில் கனடாவின் பிரியங்கா தில்லானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா் நீது.

மகளிா் கிரிக்கெட்: இறுதிச் சுற்றில் இந்தியா

காமன்வெல்த் மகளிா் டி20 கிரிக்கெட் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று தங்கப் பதக்கத்தை இலக்கு வைத்துள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவா்களில் 164/5 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் ஸ்மிருதி மந்தனா 61, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 அபாரமாக ரன்களை விளாசினா். பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 160/6 ரன்களை மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடாலி ஷிவா் 41, டேனியல் வயாட் 35 எடுத்தனா். ஸ்நே ரானா 2-28 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com