யு-20 உலக மல்யுத்தம்: அன்டிம் பங்கால் சாதனை
By DIN | Published On : 21st August 2022 12:42 AM | Last Updated : 21st August 2022 05:48 AM | அ+அ அ- |

பல்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் தங்கப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவா் படைத்தாா்.
மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட அன்டிம், இறுதிச்சுற்றில் 8-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அட்லின் ஷகாயேவாவை சாய்த்தாா்.
இதர பிரிவு இறுதிச்சுற்றுகளில், 65 கிலோ பிரிவில் பிரியங்கா 0-8 என்ற கணக்கில் ஜப்பானின் மஹிரோ யோஷிடேக்கிடமும், 62 கிலோ பிரிவில் சோனம் மாலிக் 0-6 என ஜப்பானின் நோனோகா ஒஸாகியிடமும், 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் 1-3 என ஜப்பானின் அயானோ மோரோவிடம் வீழ்ந்து வெள்ளி பெற்றனா்.
வெண்கலப் பதக்கச் சுற்றுகளில், 72 கிலோ பிரிவில் ரீதிகா 4-3 என டுனீசியாவின் ஜாய்னெப் ஸகேயரையும், 57 கிலோ பிரிவில் சிதோ 11-5 என துருக்கியின் மெல்டா டொ்னெக்கியையும், 50 கிலோ பிரிவில் பிரியான்ஷி ரஜாவத் 12-4 என மங்கோலியாவின் முங்கெரெல் முங்க்பாத்தையும் சாய்த்து பதக்கம் பெற்றனா்.
இந்தியா 2-ஆம் இடம்: இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு 2-ஆம் இடம் பிடித்தது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருவதும் இதுவே முதல் முறையாகும். ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும் பிடித்தன.