ஐபிஎல்-லில் விளையாடாதது ஏன்?: கடந்த வருடம் ரூ. 15 கோடிக்குத் தேர்வான ஜேமிசன் விளக்கம்

ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆறு, எட்டு வாரங்களை என் குடும்பத்துடன் செலவிட வேண்டும் எனத் தோன்றியது. 
ஐபிஎல்-லில் விளையாடாதது ஏன்?: கடந்த வருடம் ரூ. 15 கோடிக்குத் தேர்வான ஜேமிசன் விளக்கம்


ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ளாதது குறித்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் விளக்கம் அளித்துள்ளார்.

கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 12 டெஸ்டுகள், 5 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

ஏலப்பட்டியலில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. 2021 ஐபிஎல் ஏலத்தில் ஜேமிசனை ரூ. 15 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்தார் ஜேமிசன். எகானமி - 9.60. ஆர்சிபி விளையாடிய 15 ஆட்டங்களில் 9-ல் தான் ஜேமிசன் விளையாடினார். பந்துவீச்சில் ரன்கள் அதிகம் கொடுத்ததால் முதல் ஐபிஎல் போட்டி நல்ல அனுபவமாக அவருக்கு அமையவில்லை.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளாதது பற்றி கைல் ஜேமிசன் கூறியதாவது:

இரு காரணங்களுக்காக ஐபிஎல் ஏலத்துக்கு என் பெயரைத் தரவில்லை. கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டிகளுக்காகப் பலமுறை தனிமைப்படுத்தப்பட்டேன். இது சவாலாக இருந்தது. அடுத்த ஒரு வருடத்துக்கான அட்டவணையைப் பார்க்கும்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆறு, எட்டு வாரங்களை என் குடும்பத்துடன் செலவிட வேண்டும் எனத் தோன்றியது. 

கடந்த 12-24 மாதங்களாக என்னுடைய சர்வதேச வாழ்க்கையில் நடந்தவற்றைப் புரிந்துகொண்டுள்ளேன். புதிய வீரரான நான் என்னுடைய திறமையை அலசிப் பார்த்து ஆட்டத்திறனை மேலும் அதிகமாக்க வேண்டும். நியூசிலாந்து அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பெற விரும்புகிறேன். இதனால் என் திறமையைச் சரிசெய்யவேண்டும். எல்லா நேரமும் விளையாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை. வீட்டில் நேரம் செலவழிப்பதும் திறமையை மெருகேற்றுவதும் எனக்கு முக்கியம். இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டாம் என முடிவெடுப்பது கடினமாக இருந்தது. முடிவெடுத்த பிறகு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவு ஏற்பட்டது. வருங்காலத்தில் ஐபிஎல் போட்டியில், அச்சூழலில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

கடந்த வருட ஐபிஎல் போட்டி கற்றுக்கொள்ள இன்னொரு வாய்ப்பாக இருந்தது. இந்த ஏப்ரல் - மே மாதங்களை என்னுடைய திறமையை மெருக்கேற்ற பயன்படுத்தவுள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com