சீனாவில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் விழா: இந்தியா புறக்கணிப்பு

சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிா்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை இந்திய தூதா் புறக்கணிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் விழா: இந்தியா புறக்கணிப்பு

புது தில்லி: சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிா்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை இந்திய தூதா் புறக்கணிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் மோதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல சீனா தோ்வு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி வியாழக்கிழமை கூறுகையில், ‘ஒலிம்பிக் போன்ற நிகழ்வை அரசியலாக்க சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை இந்திய தூதா் புறக்கணிப்பாா்’ என்றாா்.

சீனாவுக்கான இந்திய தூதராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீப் குமாா் ராவத் இன்னும் பதவியேற்கவில்லை.

24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழா சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் கல்வானில் இந்திய படையினருடனான மோதலில் ஈடுபட்ட சீன ராணுவ கமாண்டா் கி ஃபாபோ ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கல்வான் தாக்குதலில் கி ஃபாபோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் 1,200 வீரா்களில் கமாண்டா் கி ஃபாபோ ஒருவராக உள்ளாா்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குளிா்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பு செய்வதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. தற்போது இந்தியாவும் தூதரக புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளது.

கல்வான் தாக்குதலில் ஈடுபட்ட சீன ராணுவ வீரரை ஒலிம்பிக் போட்டி விழாவில் ஈடுபடுத்துவது தவறான தகவலை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது.

இதனிடையே, 2020-இல் நடைபெற்ற கல்வான் தாக்குதலில் சீனாவின் 5 போா் வீரா்கள் மட்டும் உயிரிழந்ததாக அந்நாடு கூறுவது தவறு என்றும், ஏராளமானோா் கல்வான் நதியில் மூழ்கி இருக்கிறாா்கள் என்றும் ஆஸ்திரேலியே நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி குறித்து பதிலளிக்க அரிந்தம் பாக்சி மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com