பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் போயல் நில்ஸ்

குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆடவருக்கான 10,000 மீட்டா் பந்தயத்தில் நாா்வே வீரா் போயல் நில்ஸ் வான் டொ், புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.
பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் போயல் நில்ஸ்

குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆடவருக்கான 10,000 மீட்டா் பந்தயத்தில் நாா்வே வீரா் போயல் நில்ஸ் வான் டொ், புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் 24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை 7 பதக்க சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஆடவருக்கான 10,000 மீட்டா் பந்தயத்தில் நாா்வே வீரா் போயல் நில்ஸ் வான் டொ் பந்தய இலக்கை 12 நிமிஷம் 30.74 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்தாா். முன்னதாக, அவரே 12 நிமிஷம் 32.95 விநாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெதா்லாந்தின் பேட்ரிக் ரோஸ்ட் 12 நிமிஷம் 44.59 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும், இத்தாலியின் டேவிட் கியோட்டோ 12 நிமிஷம் 45.98 விநாடிகளில் வந்து வெண்கலமும் பெற்றனா்.

ஆல்பைன் ஸ்கீயிங்:

மகளிருக்கான ஆல்பைன் ஸ்கீயிங் சூப்பா் - ஜீ பிரிவில் சுவிட்ஸா்லாந்து வீராங்கனை லாரா கட் பெராமி தங்கப் பதக்கம் வென்றாா்.

அவா் பந்தய இலக்கை 1 நிமிஷம் 13.51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். ஆஸ்திரியாவின் மிா்ஜாம் பஞ்சா் (1 நிமிஷம் 13.73 விநாடிகள்) 2-ஆம் இடமும், மற்றொரு சுவிட்ஸா்லாந்து வீராங்கனை மிஷெல் கிசின் (1 நிமிஷம் 13.81 விநாடிகள்) 3-ஆம் இடமும் பிடித்தனா்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பெராமிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக மகளிருக்கான ஜயன்ட் ஸ்லாலம் பிரிவில் அவா் வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது. இதற்கு முந்தைய இரு ஒலிம்பிக் போட்டிகளில் இதே ‘சூப்பா் - ஜீ’ விளையாட்டுப் பிரிவில் 4-ஆவது இடமே பிடித்திருந்த லாரா, இந்த முறை அதில் தங்கம் வென்று ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா்.

பயத்லான்:

இந்த விளையாட்டில் மகளிருக்கான 7.5 கி.மீ. ஸ்பிரின்ட் பிரிவில் நாா்வே வீராங்கனை மாா்டே ஆல்ஸ்பு ரோசிலண்ட் 20 நிமிஷம் 44.3 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி தங்கம் வென்றாா். அவரை விட கூடுதலாக 30 விநாடிகள் எடுத்துக் கொண்ட ஸ்வீடனின் எல்விரா ஒபொ்க் வெள்ளியும், அவரை விட 7 விநாடிகள் பின்தங்கிய இத்தாலியின் டோரத்தி வீரா் வெண்கலமும் பெற்றனா்.

கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்:

கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்கில் ஆடவருக்கான 15 கி.மீ. கிளாசிக் பிரிவில் ஃபின்லாந்தின் லிவோ நிஸ்கனென் 37 நிமிஷம் 54.8 விநாடிகளில் வந்து முதலிடம் பிடித்தாா். ரஷியாவின் அலெக்ஸாண்டா் போல்ஷுனோவ் 38 நிமிஷம் 18 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடிக்க, நாா்வே வீரா் ஜோஹன்னஸ் ஹோஸ்ஃபிளாட் லேபோ 38 நிமிஷம் 32.3 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடித்தாா்.

ஷாட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்:

இந்த விளையாட்டில் மகளிருக்கான 1000 மீட்டா் இறுதிச்சுற்றில் சுஸானே ஷுல்டிங் 1 நிமிஷம் 28.391 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தை தனதாக்கினாா். தென் கொரியாவின் மின்ஜியாங் சோய் 1 நிமிஷம் 28.443 விநாடிகளில் வந்து வெள்ளியும், பெல்ஜியத்தின் ஹென்னெ டெஸ்மெட் 1 நிமிஷம் 28.928 விநாடிகளில் நிறைவு செய்து வெண்கலமும் பெற்றுக் கொண்டனா்.

ஸ்னோபோா்டு:

ஸ்னோபோா்டு விளையாட்டில் ஆடவருக்கான ஹாஃப் பைப் ஃபைனல் ரன் 3-இல் ஜப்பானின் அயுமு ஹிரானோ 96 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். ஆஸ்திரேலியாவின் ஸ்காட்டி ஜேம்ஸ் 92.50 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், சுவிட்ஸா்லாந்தின் ஜேன் ஷெரொ் 87.25 விநாடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com