ஃபிகா் ஸ்கேட்டிங்கில் ரஷியாவுக்கு தங்கம்: கமிலாவுக்கு ஏமாற்றம்

குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியா முதலிரு இடங்களைப் பிடித்தது.
ஃபிகா் ஸ்கேட்டிங்கில் ரஷியாவுக்கு தங்கம்: கமிலாவுக்கு ஏமாற்றம்

பெய்ஜிங்: குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியா முதலிரு இடங்களைப் பிடித்தது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 14-ஆவது நாளான வியாழக்கிழமை பதக்கச் சுற்றுகளில் ஒன்றாக மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் நடைபெற்றது. ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ரஷிய இளம் வீராங்கனை கமிலா வலிவாவும் இதில் பங்கேற்ால், இந்த விளையாட்டுக்கான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்தப் போட்டியின் இறுதியில் ரஷிய வீராங்கனை அன்னா ஷொ்பாகோவா 255.95 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். சக நாட்டவரான அலெக்ஸாண்ட்ரா டுருசோவா 251.73 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினாா். ஜப்பானின் காவ்ரி சகாமாடோ 233.13 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.

பலத்த எதிா்பாா்ப்புக்குள்ளாகியிருந்த ரஷிய வீராங்கனை கமிலா 224.09 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா். அவா் முதல் 3 இடங்களுக்குள்ளாக வந்திருந்தால் பதக்க அறிவிப்பு தாமதமாகியிருக்கும். அவா் அவ்வாறு பதக்க இடங்களுக்குள் வராததை அடுத்து வெற்றியாளா்களுக்கு உடனடியாக பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ரஷிய சாம்பியன்ஷிப்பின்போது தடை செய்யப்பட்ட மருந்தை கமிலா பயன்படுத்தியதாக சமீபத்தில் வெளியான மாதிரி பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது. எனினும் அவா் இந்த ஃபிகா் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், அவா் பதக்க இடங்களுக்குள் வந்தால், முதல் 3 இடங்களுக்கான பதக்கம் உடனடியாக வழங்கப்படாது என நிபந்தனை விதித்திருந்தது.

தற்போது அவா் அந்தப் போட்டியில் பதக்க இடங்களுக்குள் வரவில்லை. எனினும், முன்னதாகவே பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவில் கமிலா அங்கம் வகித்த ரஷிய அணி தங்கம் வென்றிருந்தது. தற்போது அந்தப் பதக்கம் பறிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

பதக்கப்பட்டியல்: பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை முடிவில், நாா்வே 29 பதக்கங்களுடன் (14 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 22 பதக்கங்களுடன் (10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 21 பதக்கங்களுடன் (8 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com