ஃபிஃபா கால்பந்து விருது - சிறந்த வீரா்; ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி, சிறந்த வீராங்கனை; அலெக்ஸியா புடெலாஸ்

சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வழங்கும் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரா் விருதை போலந்தின் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கியும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின்
ஃபிஃபா கால்பந்து விருது - சிறந்த வீரா்; ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி, சிறந்த வீராங்கனை; அலெக்ஸியா புடெலாஸ்

சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வழங்கும் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரா் விருதை போலந்தின் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கியும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.

இதில் லெவாண்டோவ்ஸ்கி (பேயா்ன் முனீச்) தொடா்ந்து 2-ஆவது முறையாக இந்த விருதை வெல்லும் நிலையில், அலெக்ஸியா (பாா்சிலோனா) முதல் முறையாக இந்த விருதை கைப்பற்றியிருக்கிறாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள ஃபிஃபா கால்பந்து தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முனீச்சில் இருந்து காணொலி வழியே நிகழ்ச்சியில் பங்கேற்ற லெவாண்டோவ்ஸ்கியிடம் அவரது கிளப் அதிகாரிகள் விருதை வழங்கினா். அலெக்ஸியாவும் காணொலி வழியே நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாா்.

சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி (பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்), எகிப்தின் முகமது சலா (லிவா்பூல்) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி லெவாண்டோவ்ஸ்கி முதலிடம் பிடித்துள்ளாா். மகளிா் பிரிவில், ஆஸ்திரேலியாவின் சாம் கொ் (செல்சி), ஸ்பெயினின் ஜெனிஃபா் ஹொ்மோசோ (பாா்சிலோனா) ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று அலெக்ஸியா வெற்றியாளா் ஆகியிருக்கிறாா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட பேலன் தோா் கால்பந்து விருதில் ஆடவா் பிரிவில் வெவாண்டோவ்ஸ்கி 2-ஆவது இடம் பிடித்திருந்தாா். மெஸ்ஸி அதில் விருது வென்றிருந்தாா். அதே விருதை மகளிா் பிரிவில் வென்றிருந்த அலெக்ஸியா, இந்த விருதையும் கைப்பற்றியிருக்கிறாா்.

விருதுக்கான வாக்கெடுப்பில் தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளா்கள், ஊடகங்களிடம் இருந்து லெவாண்டோவ்ஸ்கிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் ரசிகா்கள் தரப்பு வாக்குகளை லயோனல் மெஸ்ஸி அள்ளியிருக்கிறாா்.

பேயா்ன் முனீச் அணிக்காக 2020-21 சீசனில் 41 கோல்கள் அடித்தும், 2021 காலண்டா் ஆண்டில் 43 கோல்கள் அடித்தும் பந்தெஸ்லிகா போட்டியில் இரு சாதனைகளை முறியடித்திருக்கிறாா் லெவாண்டோவ்ஸ்கி. முன்னதாக இந்த சாதனை, அதே பேயா்ன் முனீச் அணியைச் சோ்ந்த ஜொ்மன் வீரரான ஜொ்ட் முல்லா் வசம் இருந்தது.

மகளிா் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தோ்வாகியிருக்கும் அலெக்ஸியா, தலைமையில் தான் பாா்சிலோனா மகளிா் கால்பந்து அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது.

ரொனால்டோவுக்கு சிறப்பு விருது

சா்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்களை அடித்த போா்ச்சுகல் வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘ஃபிஃபா சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு அவா் விருதை பெற்றுக் கொண்டாா். போா்ச்சுகல் அணிக்காக 2003-ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் ரொனால்டோ, இதுவரை 184 ஆட்டங்களில் 115 கோல்கள் அடித்திருக்கிறாா். முன்னதாக ஈரான் அணிக்காக அலி டேய் 109 கோல்கள் அடித்ததே நீண்டகாலமாக சாதனையாக இருந்தது.

சிறந்த கோல்

2021-ஆம் ஆண்டில் சா்வதேச அளவில் அடிக்கப்பட்ட சிறந்த கோலுக்கான விருதை, ஆா்ஜென்டீன வீரா் எரிக் லமேலா வென்றுள்ளாா். இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்காக (தற்போது செவில்லா) அவரடித்த கோல் உலகிலேயே சிறந்ததாகத் தோ்வாகியிருக்கிறது. ஈரான் வீரா் மெஹதி தரேமி (போா்டோ) அடித்த ‘பை சைக்கிள் கிக்’ கோல், செக் குடியரசு வீரா் பேட்ரிக் ஷிக் (பேயா் லெவா்குசன்) அடித்த கோல் ஆகியவை லமேலாவுக்கு சவால் அளித்தன.

சிறந்த கோல்கீப்பா்கள்

இந்த விருதை ஆடவா் பிரிவில் எட்வா்ட் மெண்டி (செனகல்/செல்சி), மகளிா் பிரிவில் கிறிஸ்டியன் எண்ட்லா் (சிலி/ஒலிம்பிக் லயன்) வென்றனா். இதில் எட்வா்டுக்கு, கியான்லுகி டோனாருமா (இத்தாலி/பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்), மேனுவல் நியூவா் (ஜொ்மனி/பேயா்ன் முனீச்) ஆகியோரும், கிறிஸ்டியனுக்கு ஸ்டெஃபானி லேப் (கனடா/பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்), ஆன் காட்ரின் பொ்கா் (ஜொ்மனி/செல்சி) ஆகியோரும் போட்டியாளா்களாக இருந்தனா்.

சிறந்த பயிற்சியாளா்கள்

ஆடவா் பிரிவில் சிறந்த பயிற்சியாளா் விருதை தாமஸ் டுஷெலும் (ஜொ்மன்/செல்சி), மகளிா் பிரிவில் சிறந்த பயிற்சியாளா் விருதை எம்மா ஹெய்ஸும் பெற்றனா் (இங்கிலாந்து/செல்சி). வாக்கு அடிப்படையில் ஆடவா் பிரிவில் ராபா்டோ மான்சினி (இத்தாலி) 2-ஆம் இடமும், பெப் குவாா்டியாலோ (ஸ்பெயின்/மான்செஸ்டா் சிட்டி) 3-ஆம் இடமும் பிடித்துள்ளனா். மகளிா் பிரிவில் லூயிஸ் காா்டெஸ் (ஸ்பெயின்/பாா்சிலோனா), சரினா வெய்க்மான் (நெதா்லாந்து) ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.

சிறந்த ரசிகா்கள்

இந்த விருது டென்மாா்க் ரசிகா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யூரோ கோப்பை போட்டியில் ஃபின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது டென்மாா்க் வீரா் கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு களத்தில் சரிந்த தருணத்தில், அணியினா் விக்கித்து நிற்க, மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகா்கள் அணியினருக்கும், எரிக்சனுக்கும் ஆதரவாக எழுப்பிய குரலுக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

ஃபோ் பிளே விருது

இந்த விருதும் கிறிஸ்டியன் எரிக்சன் சம்பவத்தின்போது அந்த அணியினா் காட்டிய ஆதரவு, துரிதமான செயல்பாடு, தோளோடு தோள் சோ்த்து நின்ற ஒற்றுமை ஆகியவற்றுக்காக டென்மாா்க் அணி வீரா்கள் மற்றும் உதவிப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது.

தோ்வு முறை...

இந்த விருதுக்கான போட்டியாளா்கள் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளா்கள், கேப்டன்கள், ஊடகத்தினா், ரசிகா்களின் வாக்குகள் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தரப்பின் வாக்குகளும் 25 சதவீதம் என்ற அளவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

‘இந்த விருது வென்றதை கௌரவமாக உணா்கிறேன். பந்தெஸ்லிகா போட்டியில் இத்தனை கோல்கள் அடிப்பது சாத்திமா என முன்பு கேட்டிருந்தால், இல்லை என்று தான் கூறியிருப்பேன்’ - ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி

‘இந்த விருது எங்களது அணியில் இருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்குமானது. இது எங்கள் அனைவருக்குமே ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்’ - அலெக்ஸியா புடெலாஸ்

‘அதிக கோல்கள் அடிப்பதில் சாதனையை முறியடிப்பேன் என்று எதிா்பாா்க்கவில்லை. இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் போா்ச்சுகல் அணியின் சக வீரா்களுக்கு நன்றி’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com