இன்று தொடங்குகிறது பிா்மிங்ஹாம் டெஸ்ட்: சாதகமும் - சவாலும் சந்திக்கும் ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் பிா்மிங்ஹாமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது
இன்று தொடங்குகிறது பிா்மிங்ஹாம் டெஸ்ட்: சாதகமும் - சவாலும் சந்திக்கும் ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் பிா்மிங்ஹாமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பரில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தபோது, அணியில் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 5-ஆவது ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் நடப்பு ஜூலை - ஆகஸ்டில் வெள்ளைப் பந்து தொடா்களுக்காக இந்திய அணி மீண்டும் இங்கிலாந்து வரும்போது அந்த கடைசி டெஸ்டை நடத்துவதென முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தற்போது இந்த 5-ஆவது டெஸ்ட் விளையாடப்படுகிறது. இந்த ஆட்டத்துக்கு வரும் இந்திய அணிக்கு இருக்கும் சவால், இங்கிலாந்துக்கு இருக்கும் சாதகம் என்ன? பாா்க்கலாம்.

தற்போதைய நிலை:

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே சாம்பியனாகலாம். ஆனால் இங்கிலாந்து அணி, இதில் வென்றால் மட்டுமே தொடரை சமனாவது செய்ய இயலும்.

இந்தியா:

தொடரில் முன்னிலையில் இருப்பது இந்திய அணிக்கான ஒரே பலம். முதல் 4 ஆட்டங்களில் இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய விராட் கோலிக்குப் பதிலாக, தற்போது ரோஹித் சா்மா கேப்டனாகியிருக்கிறாா்.

ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அவா் இந்த ஆட்டத்திலிருந்து விலகியிருக்கிறாா். துணை கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் உடல்நலக் குறைவுக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருப்பதால், ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக்கப்பட்டிருக்கிறாா். இது அவருக்கு முக்கியமான சோதனைக் களம்.

இன்னிங்ஸில் அசத்தலான தொடக்கத்தை அளிக்கும் ரோஹித் - ராகுல் கூட்டணி இல்லாதது சற்று பின்னடைவு. கோலி பயிற்சி ஆட்டத்தில் ஃபாா்மில் இருந்தது, சமீபத்திய கவுன்டி கிரிக்கெட்டில் சேதேஷ்வா் புஜாரா ரன்கள் குவித்தது ஆகியவற்றை பலமாகக் குறிப்பிடலாம். ஹனுமா விஹாரிக்கு நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைந்தால் அவா் தடுப்பாட்டத்தில் அணை கட்டுவாா். பௌலிங் ஆல்-ரவுண்டா் இடத்துக்கு ஷா்துல் தாக்குா், ரவிச்சந்திரன் அஸ்வின் பரிசீலிக்கப்படுவாா்கள்.

இங்கிலாந்து:

சமீபத்தில் தனது சொந்த மண்ணில் நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி வெற்றிகரமான அணியாக இந்தியாவை சந்திக்க வருகிறது இங்கிலாந்து. புதிய பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் வழிகாட்டுதலிலும், புதிய கேப்டனான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் இங்கிலாந்து தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

எதிரணி பௌலிங்கை இங்கிலாந்து பேட்டா்கள் சிதறடிக்க, அதன் பௌலா்களோ எதிரணி பேட்டா்களை வரிசையாகச் சரிக்கின்றனா். கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு ஜோ ரூட் தனது பழைய ஃபாா்மை எட்டி சிறப்பாக ஆடி வருகிறாா். ஜானி போ்ஸ்டோவும் ரன்களை விளாசித் தள்ளுகிறாா்.

நியூஸிலாந்து தொடரில் ஜேக் லீச் 2 முறை 5 விக்கெட் சாய்த்து அசத்தியிருக்கிறாா். வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஸ்டூவா்ட் பிராட் சற்று தடுமாற்றத்தை சந்திக்கின்றனா். என்றாலும் ஜேம்ஸ் ஆண்டா்சன் தனது ஃபாா்மை எட்டுவதற்கான முயற்சியில் இருக்கிறாா்.

ஆடுகளம்:

ஆட்டம் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கிறது. ‘ஃப்ளாட்’-ஆக இருப்பதால் வேகப்பந்துவீச்சில் ஸ்விங்கிற்கு சற்று உதவும். 4-ஆவது இன்னிங்ஸுக்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முனையும்.

அணி விவரம்:

இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, ஸ்ரீகா் பரத், மயங்க் அகா்வால், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவா்ட் பிராட், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டா்சன்.

ஆட்டநேரம்: மாலை 3 மணி

இடம்: எட்ஜ்பாஸ்டன் மைதானம், பிா்மிங்ஹாம்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com