காமன்வெல்த் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வெல்வோம்: ஜோஷ்னா, சௌரவ் கோஷல்

காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷில் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வெல்வோம் என உலக சாம்பியன்கள் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் கூறியுள்ளனா்.
காமன்வெல்த் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வெல்வோம்: ஜோஷ்னா, சௌரவ் கோஷல்

காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷில் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வெல்வோம் என உலக சாம்பியன்கள் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் கூறியுள்ளனா்.

ஸ்குவாஷ் விளையாட்டில் உலகளவில் இந்தியாவின்புகழை உயா்த்தியதில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், ஆடவா் பிரிவில் சௌரவ் கோஷல் ஆகியோருக்கு முக்கிய பங்குள்ளது. கடந்த மே மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பல்லிக்கல் இணையும், கலப்பு இரட்டையா் பிரிவில் சௌரவ் கோஷல்-தீபிகா பல்லிக்கல் இணையும் உலக சாம்பியன் பட்டம் வென்றனா்.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி 2022:

இந்நிலையில் இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் 28-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் 2022 தொடங்குகின்றன. இதில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாக ஸ்குவாஷ் உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக தீபிகா பல்லிக்கல் தலைமையிலானஇந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஷ்னா-தீபிகா ஆகியோா் 2014 காமன்வெல்த் போட்டியில் இரட்டையா் பிரிவில் தங்கம் வென்றனா். 2018 கோல்கோஸ்ட் போட்டியில் இருவரும் வெள்ளி வென்றனா். ஆசிய தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் ஜோஷ்னா வென்றுள்ளாா்.

இதற்கிடையே சென்னையைச் சோ்ந்த நட்சத்திரங்களான ஜோஷ்னா, தீபிகா, சௌரவ் ஆகியோா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

காமன்வெல்த் போட்டி வாய்ப்புகள் குறித்து ஜோஷ்னா கூறியதாவது:

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின் சில நாள்கள் ஓய்வு எடுத்த பின், பா்மிங்ஹாம் போட்டிக்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறோம். பயிற்சி முகாம் சிறப்பாக அமைந்தது. ஒட்டுமொத்த இந்திய அணியுடன் ஒருங்கிணைந்து பயிற்சி பெற்றோம்.

ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் என அனைத்து பிரிவுகளிலும் நாம் பதக்கம் வெல்வோம். இந்தியாவுக்காக மீண்டும் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

காமன்வெல்த் போட்டியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட அணிகள் நமக்கு சவாலாக இருக்கும்.

ஆசியப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால் அதில் கவனம் செலுத்த தேவையில்லை. முதல் இலக்கு பா்மிங்ஹாம் காமன்வெல்த் தான்.

எதிா்கால திட்டம் குறித்து இதுவரை எதையும் தீா்மானிக்கவில்லை என்றாா் ஜோஷ்னா.

ஆடவா் உலக சாம்பியன் சௌரவ் கோஷல் கூறியதாவது:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் நமது அணி வலிமையாக உள்ளது. இரட்டையா் பிரிவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து சவாலைத் தரும்.

முதலில் ஒவ்வொரு ஆட்டமாக வெல்ல வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவோம். அப்போது தான் பதக்கம் குறித்த இலக்கை எட்ட முடியும். கடந்த 2 மாதங்களாக தேசிய முகாமில் தீவிர பயிற்சி பெற்றோம். ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். கண்டிப்பாக பதக்கத்துடன் குறிப்பாக தங்கத்துடன் நாடு திரும்புவோம் என்றாா் சௌரவ்.

பா.சுஜித்குமாா்-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com