ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தயாராக உள்ளார்.
ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தயாராக உள்ளார்.

2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகினார். இந்தத் தோல்விகளால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

கடந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்ட பிறகு வேறு எந்த டென்னிஸ் போட்டியிலும் செரீனா பங்கேற்கவில்லை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது சகோதரியுடன் கலந்துகொண்டார். செரீனா வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாறு கிங் ரிச்சர்ட் என்கிற பெயரில் கடந்த வருடம் வெளிவந்தது. செரீனாவும் அவருடைய சகோதரியும் மற்றொரு டென்னிஸ் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸும் இப்படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினார்கள். ரிச்சர்ட் வில்லியம்ஸ் வேடத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விழாவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெறும் ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடவுள்ளார் செரீனா வில்லியம்ஸ். ஜூன் 19 முதல் 25 வரை நடைபெறும் இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் அவர் பங்கேற்கிறார். ஜூன் 27 முதல் தொடங்கும் விம்பிள்டன் போட்டியிலும் அவர் அடுத்ததாக விளையாடவுள்ளார். இதன் காரணமாகவே ராத்ஸே போட்டியில் பங்கேற்க அவர் முடிவெடுத்துள்ளார். 

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகும் ஆர்வத்துடன் ராத்ஸே மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்கவுள்ள செரீனா வில்லியம்ஸுக்கு சக டென்னிஸ் வீராங்கனைகள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com