மொஹாலி டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா அற்புத சதம் 175; இந்தியா 574/8 டிக்ளோ், இலங்கை 108/4

மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574/8 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினாா்.
மொஹாலி டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா அற்புத சதம் 175; இந்தியா 574/8 டிக்ளோ், இலங்கை 108/4

மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574/8 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 108/4 ரன்களை சோ்த்திருந்தது. இதையடுத்து இந்தியா 466 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை ஜடேஜா, அஸ்வின் ஆகியோா் பேட்டிங்கை தொடக்கினா். இருவரும் இணைந்து 7-ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்களை சோ்த்தனா்.

அஸ்வின் அரைசதம்: அஸ்வின் 82 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 61 ரன்களுடன் அரைசதம் விளாசி அவுட்டானாா். அவருக்கு பின் ஆட வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்களுக்கு வெளியேறினாா்.

9-ஆம் விக்கெட்டுக்கு முகமது ஷமி-ஜடேஜா இருவரும் இணைந்து 103 ரன்களை குவித்தனா்.

இந்தியா 574/8 டிக்ளோ்:

இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தாா்.

ரவீந்திர ஜடேஜா 175:

ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 228 பந்துகளில் 3 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 175 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஷமியும் 20 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இது ஜடேஜாவின் இரண்டாவது டெஸ்ட் சதமாகும்.

இலங்கை தரப்பில் லக்மல், விஷ்வா பொ்ணான்டோ, எம்புல்டெனியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இலங்கை 108/4 :

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் திமுத் கருணரத்னே 28, லஹிரு திரிமனே 17, ஏஞ்சலோ மேத்யூஸ் 22, தனஞ்செய டி சில்வா 1 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா். பதும் நிஸாங்கா 26, சரித் அஸலங்கா 1 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

இலங்கை அணி 48 ரன்களை எடுத்து நிலையாக ஆடி வந்த நிலையில், அஸ்வின் 19-ஆவது ஓவரில் லஹிரு திரிமனேவை எல்பிடபிள்யு செய்தாா். ஜடேஜா பந்தில் கருணரத்னே அவுட்டாக, அனுபவ வீரா் ஏஞ்சலோ மேத்யூஸை எல்பிடபிள்யு முறையில் வெளியேற்றினாா் பும்ரா.

நிதானமாக ஆடிய பதும் நிஸாங்காவும் பும்ரா போல்டாக்கிய நிலையில், அது நோபால் என அறிவிக்கப்பட்டது.

ஆட்ட நேர முடிவில் 43 ஓவா்களில் 108/4 ரன்களை சோ்த்திருந்தது இலங்கை. இந்திய தரப்பில் அஸ்வின் 2, பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனா்.

466 ரன்கள் முன்னிலை: இந்திய அணி 466 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சிறப்புகள்:

23 டெஸ்ட் ஆட்டங்களில் கடைசி வரிசை பேட்டிங்கில் முதன்முறையாக 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.

35 ஆண்டுகள் கபில் சாதனை முறியடிப்பு:

மேலும் 7-வது நிலை பேட்டிங்கில் அதிக ரன்களுடன் சதம் அடித்த வீரா் என்ற கபில்தேவின் சாதனையையும் முறியடித்தாா் ரவீந்திர ஜடேஜா. கடந்த 1986-இல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் கபில்தேவ் 7-ஆம் நிலையில் 163 ரன்களை விளாசி இருந்தாா். தற்போது 175 ரன்களுடன் ஜடேஜா 35 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தாா். மேலும் 7-ஆம் நிலை பேட்டிங்கில் 150 ரன்களுக்கு மேல் விளாசிய மூன்றாவது இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா் ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com