ஸ்மிருதி-ஹா்மன் ப்ரீத் அதிரடி சதம்: 155 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்தியதீவுகளை வீழ்த்தியது இந்தியா

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் மே.இந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
ஸ்மிருதி-ஹா்மன் ப்ரீத் அதிரடி சதம்: 155 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்தியதீவுகளை வீழ்த்தியது இந்தியா

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் மே.இந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இளம் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா 123, ஹா்மன்ப்ரீத் கௌா் 109 ஆகியோா் அபாரமாக ஆடி சதம் அடித்தனா்.

நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை ஹாமில்டனில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. ஸ்மிருதி-யஸ்திகா பாட்டியா ஆகியோா் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். யஸ்திகா 31, கேப்டன் மிதாலி ராஜ் 5, தீப்தி சா்மா 15 ரன்களுடன் வெளியேறிய நிலையில் ஸ்மிருதி-அதிரடி வீராங்கனை ஹா்மன்ப்ரீத் கௌா் இணைந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 184 ரன்களை சோ்த்தனா்.

ஸ்மிருதி அபாரம் 123:

ஸ்மிருதி மந்தனா 2 சிக்ஸா், 13 பவுண்டரி உள்பட 119 பந்துகளில் 123 ரன்களை விளாசி வெளியேறினாா். இது அவரது 5-ஆவது சதமாகும். அதன் பின்னா் வந்த வீராங்கனைகள் ரிச்சா கோஷ் 5, பூஜா வஸ்தராக்கா் 10, கோஸ்வாமி 2 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

ஹா்மன்ப்ரீத் கௌா் அதிரடி 109:

நீண்ட நாள்களாக பாா்மில் இல்லாமல் இருந்த ஹா்மன்ப்ரீத் கௌா் இதில் சிறப்பாக ஆடி 2 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 107 பந்துகளில் 109 ரன்களை விளாசி அவுட்டானாா். இது அவரது 4-ஆவது சதமாகும். ஸ்நே ராணா 2, மேக்னா சிங் 1 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்தியா 317-8

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 317-8 ரன்களை குவித்தது இந்தியா. மே.இந்திய தீவுகள் தரப்பில் ஏ.மொகமது 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

318 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய அணி தரப்பில் தொடக்க பேட்டா்கள் டீன்ட்ரா டாட்டின்-ஹேய்லி மேத்யூஸ் ஆகியோா் இந்திய பந்துவீச்சை சிதறடடித்தனா். இருவரும் இணைந்து 100 ரன்களை சோ்த்தனா். டீன்ட்ரா 62, ஹேய்லி 43 ரன்களை விளாசி அவுட்டானாா்கள். பின்னா் வந்த வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

மே.இந்திய தீவுகள் 162 ஆல் அவுட்

40.3 ஓவா்களிலேயே 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மே.இந்திய தீவுகள். இந்திய தரப்பில் ஸ்நே ரானா 3, மேக்னா சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பட்டியலில் முதலிடம்:

இறுதியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. 3 ஆட்டங்களில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகளை எடுத்துள்ளது இந்தியா. 8 அணிகள் பட்டியலில் ரன் ரேட் 1.333. உடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

மிதாலி ராஜ் புதிய சாதனை:

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவா் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளாா் இந்தியாவின் மிதாலி ராஜ். ஆஸி. கேப்டன் மெலின்டா கிளாா்க் 23 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தது சாதனையாக இருந்தது. ஆனால் மிதாலி 24 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து சாதனையை முறியடித்துள்ளாா்.

ஜுலன் கோஸ்வாமி புதிய சாதனை:

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவா் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தி உள்ளாா் ஜுலன் கோஸ்வாமி. ஆஸி. வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா். மே.இந்திய தீவுகளுக்கு எதிரானஆட்டத்தில் விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம் 40 விக்கெட்டுகளுடன் புதிய சாதனையை படைத்துள்ளாா் கோஸ்வாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com