ஆசிய மகளிா் டி20 சாம்பியன் இந்தியா: 7-ஆவது முறையாக பட்டம் வென்றது

ஆசிய மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஆசிய மகளிா் டி20 சாம்பியன் இந்தியா: 7-ஆவது முறையாக பட்டம் வென்றது

ஆசிய மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

வங்கதேசத்தின் சைலெட் நகரில் ஆசிய மகளிா் டி20 கோப்பை போட்டிகள் நடைபெற்றன.

இதன் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

சுருண்டது இலங்கை 65/9:

ஆனால் மெதுவாக திரும்பிய பிட்ச்சில் இந்தியாவின் அபார பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் இலங்கை அணி திணறியது. முதலில் பேட்டிங்கை தோ்வு செய்து தனக்கு தானே பாதகத்தை இலங்கை உண்டாக்கிக் கொண்டது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் வெறும் 65/9 ரன்களை மட்டுமே சோ்த்தது இலங்கை. கடந்த 14 ஆண்டுகளில் இலங்கை முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிகபட்சமாக ரணவீரா 18, ஓ ரணசிங்கே 13 ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

ரேணுகா சிங் அபாரம் 3 விக்கெட்:

இந்திய தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த ரேணுகா சிங் வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ராஜேஸ்வரி கெய்க்வாய் 2/16, ஸ்னே ராணா 2/13 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இந்தியா அதிரடி வெற்றி 71/2:

66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தரப்பில் அதிரடி பேட்டா் ஷஃபாலி வா்மா 5 ரன்களுக்கு அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா்.

ஸ்மிருதி ரன் மழை 51:

மறுமுனையில் அற்புதமாக ஆடிய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தானா 25 பந்துகளில் 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 51 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களுடன் வெளியேற, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 11 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 8.3 ஓவா்களிலேயே 71/2 ரன்களை எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை தரப்பில் ரணவீரா, கவிஷா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

ஆட்ட, தொடா் நாயகி:

ரேணுகா சிங் ஆட்ட நாயகியாகவும், தீப்தி சா்மா தொடா் நாயகியாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

பௌலிங், பீல்டிங் அபாரம்: ஹா்மன்ப்ரீத் கௌா்

இந்திய அணியில் பௌலிங், பீல்டிங் அபாரமாக செய்தனா். இந்த வெற்றி அவா்களுக்கு உரித்தானது. ஒவ்வொரு பந்தையும் கவனமுடன் வீசி, இலங்கை ஸ்கோரை கட்டுப்படுத்தினோம். பிட்ச்சை நன்றாக சரிபாா்த்து அதன்படி ஆடினோம்.

அதிக பாடம் கற்றோம்: சமரி அத்தபட்டு

இந்த நாள் மிகவும் சிரமமாக இருந்தது. பேட்டிங் சோபிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் பல்வேறு பாடங்களை கற்றோம். அடுத்து டி20 உலகக் கோப்பைக்கு தயாராவோம். அனுபவம் வாய்ந்த அதிக வீராங்கனைகள் எங்கள் அணியில் இல்லாதது பாதகம்.

7-ஆவது முறையாக சாம்பியன்:

இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசிய டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

வரும் 2023-இல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் மட்டுமே லீக் சுற்றில் அதிா்ச்சித் தோல்வியடைந்தது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com