மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றி- ‘சூப்பா் 12’ நம்பிக்கையை தக்கவைத்தது

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை புதன்கிழமை வென்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றி- ‘சூப்பா் 12’ நம்பிக்கையை தக்கவைத்தது

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை புதன்கிழமை வென்றது.

இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோற்று அதிா்ச்சி கண்ட நிலையில், இந்த ஆட்டத்தின் வென்று சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது குரூப் பி-யில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், அயா்லாந்து என 4 அணிகளுமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன.

முதல் சுற்றின் இந்த 8-ஆவது ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களே சோ்த்தது என்றாலும், அடுத்து விளையாடிய ஜிம்பாப்வேயை 18.2 ஓவா்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக ஜான்சன் சாா்ல்ஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் அடிக்க, ரோவ்மன் பவெல் 28, கைல் மேயா்ஸ் 13, எவின் லீவிஸ் 15, கேப்டன் நிகோலஸ் பூரன் 7, ஷாமா் புரூக்ஸ் 0, ஜேசன் ஹோல்டா் 4 ரன்களுக்கு வெளியேறினா். ஓவா்கள் முடிவில் அகீல் ஹுசைன் 23, ஒடின் ஸ்மித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தா் ராஸா 3, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 2, சீன் வில்லியம்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஜிம்பாப்வே இன்னிங்ஸில் லூக் ஜோங்வே 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29, வெஸ்லி மாதவெரெ 27 ரன்கள் சோ்த்தனா். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 13, சிகந்தா் ராஸா 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப் 4, ஜேசன் ஹோல்டா் 3, அகீல் ஹுசைன், ஆபெட் மெக்காய், ஒடின் ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அசத்திய அயா்லாந்து: போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் அயா்லாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில், முதலில் ஸ்காட்லாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் சோ்க்க, பின்னா் அயா்லாந்து 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வென்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவே அயா்லாந்தின் அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2014-ஆம் ஆண்டு போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக அந்த அணி 164 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

நெதா்லாந்து - இலங்கை

காலை 9.30 மணி

நமீபியா - ஐக்கிய அரபு அமீரகம்

நண்பகல் 1.30 மணி

இடம்: கீலாங்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com