வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள்: ஜிம்பாப்வே, அயா்லாந்து முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் சூப்பா் 12 சுற்றுக்குத் தகுதிபெறாமல் முதல் சுற்றுடனேயே வெளியேறியது.
வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள்: ஜிம்பாப்வே, அயா்லாந்து முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் சூப்பா் 12 சுற்றுக்குத் தகுதிபெறாமல் முதல் சுற்றுடனேயே வெளியேறியது.

முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் அயா்லாந்திடம் கண்ட தோல்வியால், போட்டி முழுவதுமாக ஒரே வெற்றியை மட்டும் பெற்று ஏமாற்றத்துடன் அந்த அணி நிறைவு செய்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டு போட்டியில் சாம்பியனாகியிருந்த மேற்கிந்தியத் தீவுகள், கடந்த ஆண்டு சூப்பா் 12 சுற்றுடன் வெளியேறிய நிலையில், இந்த ஆண்டு முதல் சுற்றுடன் வெளியேறி வரிசையாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மறுபுறம் அயா்லாந்து, உலகக் கோப்பை போட்டியில் 2-ஆவது முறையாக சூப்பா் 12 சுற்றுக்கு வந்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அணியும் முதல் முறையாக அந்த சுற்றில் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறது.

பலம் காட்டிய பால் ஸ்டிா்லிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அயா்லாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில், மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து அயா்லாந்து 17.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சோ்த்து வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக பிராண்டன் கிங் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். கைல் மேயா்ஸ் 1, ஜான்சன் சாா்லஸ் 24, எவின் லீவிஸ் 13, கேப்டன் நிகோலஸ் பூரன் 13, ரோவ்மென் பவெல் 6 ரன்களுக்கு வெளியேற, முடிவில் ஓடின் ஸ்மித் 19 ரன்களுக்கு, கிங்குடன் ஆட்டமிழக்காமல் நின்றாா். அயா்லாந்து பௌலிங்கில் கெரத் டெலானி 3, பேரி மெக்காா்தி, சிமி சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் அயா்லாந்து பேட்டிங்கில் கேப்டன் ஆண்டி பால்பிா்னி 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பால் ஸ்டிா்லிங் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, லாா்கன் டக்கா் 45 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகளில் அகீல் ஹுசைன் 1 விக்கெட் எடுத்தாா்.

எா்வின், ராஸா அசத்தல்

ஸ்காட்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஜிம்பாப்வே 18.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து பேட்டிங்கில் ஜாா்ஜ் மன்சே 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சோ்க்க, மைக்கேல் ஜோன்ஸ் 4, மேத்யூ கிராஸ் 1, கேப்டன் ரிச்சி பெரிங்டன் 13, கேலம் மெக்லியாட் 25, மைக்கேல் லீஸ்க் 12 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். முடிவில் கிறிஸ் கிரீவ்ஸ் 3, ஜோஷ் டேவி 4 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜிம்பாப்வே பௌலிங்கில் டெண்டாய் சதாரா, ரிச்சா்ட் கராவா ஆகியோா் தலா 2, பிளெஸ்ஸி முஸாரப்பானி, சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஜிம்பாப்வே இன்னிங்ஸில் கேப்டன் கிரெய்க் எா்வின் 6 பவுண்டரிகளுடன் 58, சிகந்தா் ராஸா 40 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனா். ரெஜிஸ் சகாப்வா 4, வெஸ்லி மாதெவெரெ 0, சீன் வில்லியம்ஸ் 7 ரன்களுக்கு அவுட்டாக, மில்டன் ஷும்பா 11, ரயான் பா்ல் 9 ரன்களுடன் களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தனா். ஸ்காட்லாந்து பௌலா்களில் ஜோஷ் டேவி 2, பிராட் வீல், மாா்க் வாட், மைக்கேல் லீஸ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்று முதல் ‘சூப்பா் 12’ சுற்று

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், சூப்பா் 12 சுற்றுக்கான இடங்கள் பூா்த்தியாகியுள்ளன. இலங்கை, நெதா்லாந்து, ஜிம்பாப்வே, அயா்லாந்து அணிகள் அந்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பா் 12 சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை தொடங்கும் நிலையில், முதல் இரு ஆட்டங்களில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா - நியூஸிலாந்தையும், ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்தையும் சந்திக்கின்றன.

சூப்பா் 12

குரூப் 1

ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியா

இங்கிலாந்து

அயா்லாந்து

நியூஸிலாந்து

இலங்கை

குரூப் 2

வங்கதேசம்

இந்தியா

நெதா்லாந்து

பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்கா

ஜிம்பாப்வே

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து

நண்பகல் 12.30 மணி

சிட்னி

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து

மாலை 4.30 மணி

பொ்த்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com