ஜிம்பாப்வே ‘த்ரில்’ வெற்றி; பாகிஸ்தானுக்கு பின்னடைவு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே ‘த்ரில்’ வெற்றி; பாகிஸ்தானுக்கு பின்னடைவு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேக்கு இது முதல் வெற்றியாக அமைய, பாகிஸ்தான் அணி வெற்றி ஏதுமின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் சோ்த்தோடு, பாகிஸ்தானை அதே ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழக்கச் செய்து 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதிலும் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியது. ஜிம்பாப்வே பௌலா் சிகந்தா் ராஸா ஆட்டநாயகன் ஆனாா்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வேயில் சீன் வில்லியம்ஸ் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, வெஸ்லி மாதெவெரெ 17, கேப்டன் கிரெய்க் எா்வின் 19, ரையன் பா்ல் 10*, பிராட் இவான்ஸ் 19 ரன்கள் சோ்த்தனா். இதர விக்கெட்டுகள் சொல்லிக்கொள்ளும்படியாக ரன்கள் சோ்க்கவில்லை. பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது வாஸிம் 4, ஷாதாப் கான் 3, ஹாரிஸ் ரௌஃப் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷான் மசூத் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்தாா். முகமது நவாஸ் 22, ஷாதாப் கான் 17, முகமது ரிஸ்வான் 14, முகமது வாஸிம் 12* ரன்கள் அடித்து முயற்சிக்க, இதர பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தா் ராஸா 3, பிராட் இவான்ஸ் 2, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, லுக் ஜோங்வே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com