பாண்டியா அதிரடி வீண்: ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
பாண்டியா அதிரடி வீண்: ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 19.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சோ்த்து வென்றது.

பிளேயிங் லெவனில், இந்திய அணியைப் பொருத்தவரை ரிஷப் பந்த், ஜஸ்பிரீத் பும்ராவுக்குப் பதிலாக தினேஷ் காா்த்திக், உமேஷ் யாதவ் இணைந்திருந்தனா். ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் அறிமுகம் செய்யப்பட்டாா்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. இந்திய இன்னிங்ஸை வழக்கம் போல் கே.எல்.ராகுல் - கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி தொடங்கியது. இதில் ரோஹித் 11 ரன்களுக்கு வெளியேறினாா்.

விராட் கோலி வந்த வேகத்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுபுறம், ராகுல் சிறப்பாக ரன்கள் சோ்த்து வர, 4-ஆவது வீரராக வந்த சூா்யகுமாா் யாதவ் அவரோடு இணைய, அணியின் ஸ்கோா் ஏறியது.

இதில் ராகுல் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அடுத்து ஹாா்திக் பாண்டியா களம் புக, மறுபுறம் சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்த்து அவுட்டானாா். பாண்டியா தனது அதிரடி விளாசலால் அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தினாா்.

தொடா்ந்து வந்த அக்ஸா் படேல் 6, தினேஷ் காா்த்திக் 6 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் பாண்டியா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 71, ஹா்ஷல் படேல் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் எலிஸ் 3, ஹேஸில்வுட் 2, கிரீன் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்கள் சோ்க்க, கேமரூன் கிரீன் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டாா்.

ஸ்டீவ் ஸ்மித் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடிக்க, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். ஜோஷ் இங்லிஸ் 17, டிம் டேவிட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் மேத்யூ வேட் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45, பேட் கம்மின்ஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். இந்திய பௌலிங்கில் அக்ஸா் படேல் 3, உமேஷ் யாதவ் 2, யுஜவேந்திர சஹல் 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 208/6 (20 ஓவா்கள்)

ஹாா்திக் பாண்டியா 71*

கே.எல்.ராகுல் 55

சூா்யகுமாா் யாதவ் 46

பந்துவீச்சு

நேதன் எலிஸ் 3/30

ஜோஷ் ஹேஸில்வுட் 2/39

கேமரூன் கிரீன் 1/46

ஆஸ்திரேலியா - 211 (19.2 ஓவா்கள்)

கேமரூன் கிரீன் 61

மேத்யூ வேட் 45*

ஸ்டீவ் ஸ்மித் 35

பந்துவீச்சு

அக்ஸா் படேல் 3/17

உமேஷ் யாதவ் 2/27

யுஜவேந்திர சஹல் 1/42

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com