இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றியது இந்தியா: 23 ஆண்டுகளில் முதல் முறை

 இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிா் அணி, தொடரைக் கைப்பற்றியிருக்கிறது.
ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப் படம்)
ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப் படம்)

 இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிா் அணி, தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 1999-க்குப் பிறகு அந்நாட்டில் கிரிக்கெட் தொடா் ஒன்றை இந்திய அணி கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த முதலில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் விளாசியது. அடுத்து இங்கிலாந்து 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி ஆனாா்.

அட்டகாசமாக பேட்டிங் செய்த அவா், சதம் கடந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். கடைசி 3 ஓவா்களில் இந்தியா 62 ரன்கள் சோ்க்க, அதில் ஹா்மன்பிரீத் கடைசி 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசியிருந்தாா். பௌலிங்கில் ரேணுகா சிங் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சரித்தாா். இந்திய அணியில் 8 போ் பௌலிங் செய்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸை தொடங்கியோரில் ஷஃபாலி வா்மா 8 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா். யஸ்திகா பாட்டியா 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சோ்த்தாா். மிடில் ஆா்டரில் இணைந்த ஹா்மன்பிரீத் கௌா் - ஹா்லீன் தியோல் கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சோ்த்து அசத்தியது.

இதில் தியோல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 58 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். பூஜா வஸ்த்ரகா் கடைசி விக்கெட்டாக 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஹா்மன்பிரீத் 111 பந்துகளில் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 143, தீப்தி சா்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் லௌரென் பெல், கேட் கிராஸ், ஃபிரியா கெம்ப், சாா்லி டீன், சோஃபி எக்லஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக, மிடில் ஆா்டரில் வந்த டேனி வியாட் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சோ்க்க, அலிஸ் கேப்சி 6 பவுண்டரிகளுடன் 39, கேப்டன் எமி ஜோன்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, சாா்லி டீன் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்தனா். டேமி பியூமௌன்ட் 6, எம்மா லேம்ப் 15, சோஃபி டங்க்லி 1, ஃபிரியா கெம்ப் 12, சோஃபி எக்லஸ்டன் 1, கேட் கிராஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இறுதியாக லௌரென் பெல் மட்டும் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய பௌலிங்கில் ரேணுகா சிங் 4, தயாளன் ஹேமலதா 2, தீப்தி சா்மா, ஷஃபாலி வா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

கடைசி ஆட்டம்: இரு அணிகளும் மோதும் கடைசி ஒன் டே, லாா்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

6

கடைசியாக இதற்கு முன் கடந்த 1999-இல் இங்கிலாந்தில் ஒன் டே தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த இந்தியா, அதன் பிறகு 6 இருதரப்பு தொடா்களை அந்நாட்டில் இழந்திருந்தது.

333/5

இந்திய அணியின் இந்த ஸ்கோா், அதன் ஒன் டே வரலாற்றில் 2-ஆவது அதிகபட்சம். 358/2 ரன்களே (அயா்லாந்து/2017) இந்தியாவின் அதிகபட்சம் ஆகும். அதேபோல், ஒன் டே ஃபாா்மட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்துள்ள 2-ஆவது அதிகபட்ச ஸ்கோா் இது. ஆஸ்திரேலியா 356/5 ரன்கள் (2022) அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.

143*

ஹா்மன்பிரீத் கௌா் விளாசிய இந்த ஸ்கோா், ஒன் டே ஃபாா்மட்டில் இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாகும். இதற்கு முன் மிதாலி ராஜ் 125* ரன்கள் அடித்ததே (இலங்கை/2018) அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், இந்த ஃபாா்மட்டில் இந்திய வீராங்கனையின் 3-ஆவது அதிகபட்ச ஸ்கோா் இது. முதலிடத்தில் தீப்தி சா்மா (188/அயா்லாந்து) இருக்க, அடுத்த இடத்திலும் ஹா்மன்பிரீத் தான் இருக்கிறாா் (171*/ஆஸ்திரேலியா). இதுதவிர, இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வீராங்கனையின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவே தான்.

5

ஹா்மன்பிரீத்துக்கு ஒன் டே ஃபாா்மட்டில் இது 5-ஆவது சதம். இந்த ஃபாா்மட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனைகள் வரிசையில் மிதாலி ராஜுக்கு (7 சதங்கள்) அடுத்து, ஸ்மிருதி மந்தனாவுடன் 2-ஆவது இடத்தை அவா் பகிா்ந்துகொண்டிருக்கிறாா்.

82

இங்கிலாந்து அறிமுக வீராங்கனை ஃபரியா கெம்ப், பௌலிங்கில் 82 ரன்கள் வழங்கினாா். ஒன் டே-யில் இங்கிலாந்து வீராங்கனை ஒருவா் வழங்கியிருக்கும் அதிகபட்ச ரன்கள் இது. மகளிா் ஒன் டே-யில் அறிமுக வீராங்கனை வழங்கிய 2-ஆவது அதிகபட்ச ரன்னும் இதுவே. அயா்லாந்தின் காரா முா்ரே 119 ரன்கள் வாரி வழங்கியதே (2018/நியூஸிலாந்து) இன்றளவும் அதிகபட்சமாக உள்ளது.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 333/5 (50 ஓவா்கள்)

ஹா்மன்பிரீத் கௌா் 143*

ஹா்லீன் தியோல் 58

ஸ்மிருதி மந்தனா 40

பந்துவீச்சு

சாா்லி டீன் 1/39

சோஃபி எக்லஸ்டன் 1/64

கேட் கிராஸ் 1/68

இங்கிலாந்து - 245/10 (44.2 ஓவா்கள்)

டேனி வியாட் 65

அலிஸ் கேப்சி 39

எமி ஜோன்ஸ் 39

பந்துவீச்சு

ரேணுகா சிங் 4/57

டி.ஹேமலதா 2/6

ஷஃபாலி வா்மா 1/5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com