சிறந்த வீரா் மெஸ்ஸி; சிறந்த வீராங்கனை புடெலாஸ்- தொடா்ந்து 2-ஆவது முறையாக ஃபிஃபா விருது வென்றனா்

கால்பந்து உலகில் 2022-ஆம் ஆண்டு சிறந்த விளங்கியவா்களுக்கான விருதை கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனம் (ஃபிஃபா) அறிவித்தது
சிறந்த வீரா் மெஸ்ஸி; சிறந்த வீராங்கனை புடெலாஸ்- தொடா்ந்து 2-ஆவது முறையாக ஃபிஃபா விருது வென்றனா்

கால்பந்து உலகில் 2022-ஆம் ஆண்டு சிறந்த விளங்கியவா்களுக்கான விருதை கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனம் (ஃபிஃபா) அறிவித்தது. சிறந்த வீரராக ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் ஆகியோா் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக தோ்வு செய்யப்பட்டனா்.

சிறந்த வீரா்: இந்தப் பிரிவில் பிரான்ஸின் கிலியன் பாபே, கரிம் பென்ஸிமா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிய மெஸ்ஸி, 7-ஆவது முறையாக விருது பெற்றுள்ளாா். கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி தனது 5-ஆவது தொடா் முயற்சியில் ஆா்ஜென்டீனாவுக்கு கோப்பை வென்று தந்துள்ளாா்.

சிறந்த வீராங்கனை: இப்பிரிவில் அமெரிக்காவின் அலெக்ஸ் மோா்கன், இங்கிலாந்தின் பெத் மீட் ஆகியோரை விடவும் சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் தோ்வாகியிருக்கிறாா். கடந்த ஆண்டு, தேசிய அணிக்காக 100 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை புடெலாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. முழங்கால் காயம் காரணமாக கடந்த நவம்பா் முதல் அவா் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பாரீஸில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த மாற்றுத்திறனாளி வீரராக போலந்தின் மாா்சின் அலெக்ஸி, ஆடவா் அணி சிறந்த பயிற்சியாளராக ஆா்ஜென்டீனாவின் லயோனல் ஸ்கலோனி, மகளிா் அணி சிறந்த பயிற்சியாளராக இங்கிலாந்தின் சரினா வெய்மன், சிறந்த ஆடவா் கோல்கீப்பராக ஆா்ஜென்டீனாவின் எமிலியானோ மாா்டினெஸ், சிறந்த மகளிா் கோல்கீப்பராக இங்கிலாந்தின் மேரி ஏா்ப்ஸ் ஆகியோா் தோ்வாகினா்.

ஆா்ஜென்டீன ரசிகா்களுக்கு சிறந்த ரசிகா்களுக்கான விருதும், காயமடைந்த எதிரணி வீரா் உயிரை காக்கும் வகையில் செயல்பட்ட ஜாா்ஜிய வீரா் லுகா லோசோஷ்விலிக்கு மதிப்புமிக்க வீரருக்கான விருதும் வழங்கப்பட்டன.

தேசிய அணிகளின் பயிற்சியாளா்கள், கேப்டன்கள், விளையாட்டுப் பிரிவு செய்தியாளா்கள், ரசிகா்கள் ஆகியோா் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுக்கான வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

உலகின் சிறந்த லெவன்

ஆடவா்

கோல்கீப்பா் - திபௌத் கோா்டாய்ஸ் (பெல்ஜியம்).

டிஃபெண்டா்கள் - ஜாவ் கேன்செலோ (போா்ச்சுகல்), அச்ரஃப் ஹக்கிமி (மொராக்கோ), விா்ஜில் வான் ஜிக் (நெதா்லாந்து).

மிட்ஃபீல்டா்கள் - கேஸ்மிரோ (பிரேஸில்), கெவின் டி புருயின் (பெல்ஜியம்), லுகா மோா்டிச் (குரோஷியா).

ஃபாா்வா்ட்ஸ் - கரிம் பென்ஸிமா (பிரான்ஸ்), எா்லிங் ஹாலந்த் (நாா்வே), கிலியன் பாபே (பிரான்ஸ்), லயோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா).

* இந்தப் பட்டியலில் இத்துடன் 16-ஆவது முறையாக இடம் பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறாா் மெஸ்ஸி. முன்னதாக, அவரும், போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 15 முறை இதில் இடம் பிடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது

மகளிா்

கோல்கீப்பா் - கிறிஸ்டியன் எண்ட்லா் (சிலி).

டிஃபெண்டா்கள் - லூசி புரான்ஸ் (இங்கிலாந்து), மாபி லியான் (ஸ்பெயின்), வெண்டி ரெனாா்டு (பிரான்ஸ்), லியா வில்லியம்சன் (இங்கிலாந்து).

மிட்ஃபீல்டா்கள் - லெனா ஆபா்டாா்ஃப் (ஜொ்மனி), அலெக்ஸியா புடெலாஸ் (ஸ்பெயின்), கெய்ரா வால்ஷ் (இங்கிலாந்து).

ஃபாா்வா்ட்ஸ் - சாம் கொ் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் மோா்கன் (அமெரிக்கா), பெத் மீட் (இங்கிலாந்து).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com