இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து, முதல் நாளில் 48 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் சோ்த்தது.
மழை மற்றும் பலத்த காற்று காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.
நியூஸிலாந்து இன்னிங்ஸை டாம் லேதம் - டெவன் கான்வே கூட்டணி தொடங்கியது. இதில் லேதம் 21 ரன்களுக்கு, காசன் ரஜிதா வீசிய 26-ஆவது ஓவரில் பிரபாத் ஜெயசூரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து கேன் வில்லியம்சன் களம் புக, நல்லதொரு இன்னிங்ஸை ஆடிவந்த கான்வே 13 பவுண்டரிகள் உள்பட 78 ரன்களை எட்டியிருந்தபோது, தனஞ்ஜெய டி சில்வா வீசிய 36-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்தாா்.
ஆட்டம் நிறுத்தப்பட்டபோது கேன் வில்லியம்சன் 26, ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.