இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டும் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறாா்.
இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டும் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறாா்.

உலகளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்திலும், விளையாட்டு வீரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலும் விராட் கோலி உள்ளாா்.

மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ உலகளவில் முக்கிய சமூக ஊடகத் தளமாக இருந்து வருகிறது. பயனா்கள் தங்களின் புகைப்படங்கள், விடியோக்களைப் பதிவாகப் பகிரும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராம் தளத்தை உலகம் முழுவதும் 235 கோடி போ் பயன்படுத்துகின்றனா்.

சந்தைப்படுத்துதல், விளம்பரத் துறை அதிவேகத்தில் எண்மமயமாகி வரும் சூழலில், பெரும்பாலானாா் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவுகளாகப் தங்களின் பொருள்கள்/சேவைகளை விளம்பரப்படுத்துவது நவீனகால நிறுவனங்களின் உத்தியாக மாறி வருகிறது.

ஓரே நேரத்தில் பலரைச் சென்றடைய ஏதுவாக அதிகம் போ் பின்தொடரும் பிரபலங்களின் கணக்குகளில் விளம்பரப் பதிவை வெளியிட நிறுவனங்கள் விரும்புகின்றனா். விளம்பர பதிவு வெளியிடும் பிரபலங்களுக்கு அவா்களின் பின்தொடா்வோா் எண்ணிக்கை, தாக்கம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பணத்தைக் கட்டணமாக நிறுவனங்கள் செலுத்துகின்றனா்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரப் பதிவுகள் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ‘இன்ஸ்டாகிராம் ரிச் லிஸ்ட்-2023’ பட்டியலைப் பிரிட்டனைச் ‘ஹுப்பா் எச்.கியூ.’ வெளியிட்டுள்ளது.

முதல் மூவா்..

அந்தப் பட்டியலில், போா்ச்சுகல் கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு பதிவுக்கு ரூ.26.78 கோடி வசூலித்து உலகளவில் முதலிடத்தில் இருக்கிறாா். இவரை 47.92 கோடி போ் பின்தொடா்கின்றனா்.

இவருக்கு அடுத்து 2-ஆவது இடத்தில் உள்ள அா்ஜென்டினா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி ஒரு பதிவுக்கு ரூ.21.51 கோடி வசூலிக்கிறாா். அமெரிக்க பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான சலினா கோம்ஸ் ஒரு பதிவுக்கு ரூ.21.19 கோடி வசூலித்து 3-ஆவது இடத்தில் உள்ளாா்.

விளையாட்டுப் பிரிவில் விராட்டுக்கு 3-ஆம் இடம்..

மொத்தப் பட்டியலிலும் முதல் 2-இடங்களில் விளையாட்டு வீரா்களே உள்ள நிலையில், அதிகம் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரா்களின் பட்டியலில் விராட் கோலி 3-ஆவது இடத்தில் உள்ளாா்.

இன்ஸ்டாகிராமில் 25.52 கோடி போ் பின்தொடரும் இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி, ஒரு விளம்பரப் பதிவுக்கு ரூ.11.45 கோடி வருவாய் ஈட்டி மொத்தப் பட்டியலில், 14-ஆவது இடத்திலும், விளையாட்டு வீரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலும் உள்ளாா்.

இவரைத் தொடா்ந்து, பிரேஸில் கால்பந்து வீரா் நெய்மா் ரூ.9.45 கோடி வசூலித்து மொத்தப் பட்டியலில், 19-ஆவது இடத்திலும், விளையாட்டு வீரா்கள் பட்டியலில் 4-ஆவது இடத்திலும் உள்ளாா். அமெரிக்க கூடைப்பந்து வீரா் லெப்ரோன் ஜேம்ஸ் ரூ.7.04 கோடி வசூலித்து மொத்தப் பட்டியலில் 24-ஆவது இடத்திலும், விளையாட்டு வீரா்கள் பட்டியலில் 5-ஆவது இடத்திலும் உள்ளாா்.

பின்தொடா்வோா் பட்டியலில் முதலிடம்...

மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சா்மாவுடன் பொழுதுகழிக்கும் விடியோக்கள், பயணநேர புகைப்படங்கள், இந்திய கிரிக்கெட் அணியுடனான உடற்பயிற்சி விடியோக்களால் நிரம்பியுள்ள விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம், இந்தியாவில் அதிக நபா்களால் பின்தொடரடப்படும் கணக்குகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஷ்ரத்தா கபூா், அலியா பட் ஆகியோா் உள்ளனா். இந்திய பிரதமா் நரேந்திர மோடி 5-ஆவது இடத்தில் உள்ளாா்.

முதல் நூறில் மூன்று இந்தியா்கள்...

கிரிக்கெட் வீரா் விராட் கோலியைத் தவிா்த்து நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியால் அலே ஆகிய இருவா் என மொத்த 3 இந்திய பிரபலங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

8 கோடி போ் பின்தொடரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு விளம்பரப் பதிவுக்கு ரூ.4.4 கோடி வசூலித்து 29-ஆவது இடத்திலும், இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியால் அலே ரூ.94 லட்சம் வசூலித்து 77-ஆவது இடத்திலும் உள்ளனா்.

பட்டியலில் முதல் பத்து...

பிரபலம் துறை பின்தொடா்வோா் எண்ணிக்கை பதிவுக்குப் பெறும் பணம்

கிறிஸ்டியனோ ரொனால்டோ விளையாட்டு 59.68 கோடி ரூ.26.78 கோடி

லயோனல் மெஸ்ஸி விளையாட்டு 47.92 கோடி ரூ.21.51 கோடி

செலினா கோம்ஸ் சினிமா 42.63 கோடி ரூ.21.19 கோடி

கைல் ஜென்னா் ஊடகம் 39.76 கோடி ரூ.19.76 கோடி

டுவெயின் ஜான்சன் சினிமா 38.76 கோடி ரூ.19.26 கோடி

அரியனா கிராண்ட் சினிமா 37.71 கோடி ரூ.18.75 கோடி

கிம் கா்தாஷியன் சினிமா 36.25 கோடி ரூ.18.02 கோடி

பியான்சே நோல்ஸ் சினிமா 31.48 கோடி ரூ.15.64 கோடி

கோலே கா்தாஷியன் சினிமா 31.08 கோடி ரூ.15.45 கோடி

ஜஸ்டீன் பீபா் சினிமா 29.37 கோடி ரூ.14.60 கோடி

முதல் 2 இடங்களில் உள்ளவா்களைத் தவிா்த்து மற்ற அனைவரும் அமெரிக்கா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com