வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா மோதலாக மாறிய கே.எல். ராகுல் விவகாரம்!

உங்களிடம் இந்த விவகாரம் பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்றார்...
வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா மோதலாக மாறிய கே.எல். ராகுல் விவகாரம்!

கே.எல். ராகுல் விவகாரம் சமூகவலைத்தளத்தில் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா மோதலாக மாறியுள்ளது. 

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடியுள்ளார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ட்விட்டரில் ராகுலைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

வெளிநாடுகளில் கே.எல். ராகுல் நன்கு விளையாடியதால் தான் தற்போது இந்திய அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். மேலும் தனது யூடியூப் தளத்தில் வெங்கடேஷ் பிரசாத்தின் விமர்சனங்கள் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இதற்கு ட்விட்டரில் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்தார். தன்னை ஆகாஷ் சோப்ரா தவறான முறையில் விமர்சனம் செய்துள்ளதாகவும் இதேபோல ஒரு காலத்தில் ரோஹித் சர்மாவையும் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்ததையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் தன்னுடைய விமர்சனத்தால் ராகுலின் ஆட்டத்திறன் பாதிக்காது. ஆட்டம் நடைபெறும்போது தங்களுடைய செல்பேசிகளை நிர்வாகத்திடம் கொடுத்துவிடுவதால் எந்த வீரரும் யாருடைய கருத்தையும் படிக்க மாட்டார்கள் என்றார். 

இதற்கு உடனடியாகப் பதிலளித்தார் ஆகாஷ் சோப்ரா. நீங்கள் ட்விட்டரிலும் நான் யூடியூபிலும் பேசியுள்ளோம். ஒரு விடியோ உரையாடலுக்கு உங்களை அழைக்கிறேன். நேரலையாக இருவரும் அதைச் செய்யலாம். கருத்துவேறுபாடுகள் நல்லதுதான். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர் இருக்க மாட்டார். அதனால் யாரும் பணம் சம்பாதிக்க முடியாது. உங்களுக்குச் சம்மதமா? உங்களுடைய செல்பேசி எண் என்னிடம் உள்ளது என்றார். 

ஆனால் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் வெங்கடேஷ் பிரசாத். ட்விட்டரில் நான் தெளிவாகக் கூறிவிட்டேன். உங்களிடம் இந்த விவகாரம் பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்றார். சமூகவலைத்தளத்தில் இரு முன்னாள் வீரர்கள், கே.எல். ராகுல் பேட்டிங் குறித்து மோதிக்கொள்வது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த விவகாரம் குறித்து பேசி வருகிறார்கள். இதனால் கே.எல். ராகுல் மோசமாக விளையாடி வருவது ட்விட்டரில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com