முக்கிய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் சதம்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை
By DIN | Published On : 21st May 2023 07:49 PM | Last Updated : 21st May 2023 07:54 PM | அ+அ அ- |

ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் குஜராத், சென்னை, லக்னௌ ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், விவ்ரந்த் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஹைதராபாத அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அரைசதம் கடக்க, இவர்களைப் பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் திணறினர்.
இருப்பினும் விவ்ரந்த் சர்மா 69 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 83 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹென்றி ப்ரூக் 0, கிளென் பிலிப்ஸ் 1, சன்விர் சிங் 4, கேப்டன் மார்க்ரம் 13, ஹென்றிக் கிளாசன் 18 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷண் 14 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோஷித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து கேமரூன் கிரீனும் தன் பங்கிற்கு அதிரடியில் கலக்கினார். அரைசதம் கடந்த ரோஹித் 56 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார்.
இருவரும் கடைசி வரை ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் சதம் அடித்து அசத்தினார். அவர் 100(47), சூர்யகுமார் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.