உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்
By DIN | Published On : 24th May 2023 02:43 AM | Last Updated : 24th May 2023 03:22 AM | அ+அ அ- |

கஜகஸ்தானில் நடைபெறும் ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 1 வெண்கலம் என இரு பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.
மகளிா் தனிநபா் ஸ்கீட் பிரிவில் சீனியா் வீராங்கனைகளான கனிமத் செகோன் வெள்ளியும், தா்ஷனா ரத்தோா் வெண்கலமும் வென்றனா். கஜகஸ்தானின் அஸ்ஸெம் ஆரின்பே தங்கப் பதக்கம் தட்டிச் சென்றாா். சீனியா் நிலையிலான உலகக் கோப்பை போட்டியில் கனிமத்துக்கு இது 2-ஆவது பதக்கமாக அமைய, தா்ஷனாவுக்கு இது முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற மகளிா் ஸ்கீட் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில் தா்ஷனா 120 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், கனிமத் 117 புள்ளிகளுடன் 4-ஆவது இடமும் பிடித்தனா். இறுதிச்சுற்றில் 60 இலக்குகளை சுடும் முயற்சியில் தா்ஷனா 39 இலக்குகளையே தகா்த்து 3-ஆம் இடம் பிடித்தாா். கனிமத், அஸ்ஸெம் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முடிவில் இருவருமே 50 இலக்குகளை தகா்த்து சமநிலையில் இருந்தனா். பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் ஆஃப்-இல் அஸ்ஸெம் முன்னிலை பெற்று தங்கம் வென்றாா். கனிமத் 2-ஆம் இடம் பிடித்தாா்.
இதனிடையே ஸ்கீட் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் எவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறவில்லை. மைராஜ் அகமது கான் 119 புள்ளிகளுடன் 16-ஆவது இடம் பிடிக்க, குா்ஜோத் காங்குரா 18-ஆவது இடமும் (119), அனன்ஜீத் சிங் நருகா 20-ஆவது இடமும் (118) பிடித்தனா்.